1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 17 ஏப்ரல் 2016 (11:24 IST)

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - கி. வீரமணி

ஐபிஎல் கிரிக்கெட்டை அரசுகள் தடை செய்யவேண்டும் என்றும் இதற்கென ஒரு தனி இயக்கமும் இந்தியா முழுவதும் நடத்தப்படல் வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. விரமணி கூறியுள்ளார்.
 

 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ்டிரத்தில் கடும் வறட்சி நிலவுகிறது; பருவ மழை பொய்த்தது; பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பு, குளோபல் வாமிங் (Global Warming) எனும் தட்பவெட்பப் பாதிப்பு இவையே காரணங்களாகும். மக்கள் குடிநீருக்கே மக்கள் அவதியுறுகிறார்கள் - பணம் கொடுத்து குடிநீரை வாங்கிப் பருகும் பரிதாப நிலை உள்ளது!
 
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் பந்தயம் என்ற கிரிக்கெட் (சூதாட்டம்) விளையாட்டுகள் அங்கே ஏற்பாடு செய்ததின்மூலம், நாள் ஒன்றுக்கு கிரிக்கெட் விளையாட்டுக் களத்தின் புல் தரைமீது தண்ணீர் தெளிப்பதில் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் (மொத்தமாக) செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 
தமிழில் ஒரு பழமொழியை கிராமங்களில் சொல்வார்கள்; “குடிக்கக் கூழ் இல்லை; கொப்பளிப்பதற்குப் பன்னீர்!’’ என்று. அதை நினைவூட்டுவதாக உள்ளது - இந்த தனி முதலாளிகளின் அடிமை வியாபாரம். (மனிதர்கள் தங்களைத் தாங்களே விற்றுக் கொள்ளுவது இல்லாத நாட்டில், கிரிக்கெட் என்ற இந்த சூதாட்ட விளையாட்டு வீரர்கள், விலைக்குத் தங்களை விற்றுக் கொள்ளும் வெட்கப்படவேண்டிய வியாபாரம் நடைபெறுகிறது).
 
ஏலம் எடுக்கும் முதலாளிகளின் அணிகள் கோடிக்கணக்கில் கொள்ளை லாபத்தைக் குவிக்கின்றனர். கிரிக்கெட் ஐபிஎல் விளையாட்டுப் போட்டி என்பது தனி மனிதர்களின் வாணிபம்; பொது மக்களுக்கு இதனால் காதொடிந்த ஊசி அளவிற்குக்கூட லாபம் ஏதும் கிடையாது!
 
அரசுக்கு வரிமூலம் வருமானம் என்ற ஒரு நொண்டிச் சமாதானம் கூறப்படுகிறது. மக்கள் நல்வாழ்வை அடகு வைக்கும், இந்தக் “கறை படிந்த வருமானம்’’ அரசுக்குத் தேவையா?
 
“குடிக்க நீரின்றிச் சாகும் மக்கள் அவதியுறும் சமயத்தில், இப்படி ஒரு விளையாட்டா?’’ என்று நீதி கேட்டு ஒருவர் போட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்று, மும்பை உயர்நீதிமன்றம் தந்த நல்லதோர் தீர்ப்பு! ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் எங்கும் நடைபெறக்கூடாது; வேண்டுமானால், வேறு மாநிலத்தில் எங்காவது நடத்திக் கொள்ளலாம் என்பது அரிய தீர்ப்பாகும்.
 
“மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’’ ஆங்கில ஏடு இத்தீர்ப்பின்மீது தனது சாபத்தை ஏவிவிட்டுள்ளது. இவர்களுக்கெல்லாம் எவ்வளவு மக்கள் நலம் பார்த்தீர்களா? பாதுகாக்கப்பட வேண்டியது மக்கள் உயிரா? கிரிக்கெட்டா?
 
இது பாராட்டத்தக்க பொதுமக்கள் நலன் சார்ந்த நல்ல தீர்ப்பு ஆகும்! வழக்குப் போட்டவர், தீர்ப்பளித்த நீதிபதிகள் அனைவருமே நமது பாராட்டிற்குரியவர்களே!
 
பொதுவாக பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளை வருவாயாக - கொள்ளை லாபமாகப் பெறும் “கிரிக்கெட்’’ என்ற உயர்மட்ட மேட்டுக்குடி மக்களின் விளையாட்டு - உடலுழைப்பிலும் குறைவானதேயாகும், கால் பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, சடுகுடு (கபடி) விளையாட்டுக்களோடு ஒப்பிடுகையில்!
 
ஐபிஎல் என்ற இந்த விளையாட்டினால், சூதாட்டமும் பெருகி, பொது ஒழுக்கச் சிதைவும் பரவலாக ஏற்பட்டுள்ளது!
 
அய்.பி.எல். ஆட்டத்தைத் தடை செய்க!
 
ஐபிஎல் கிரிக்கெட்டை அரசுகள் தடை செய்யவேண்டும்; இதற்கென ஒரு தனி இயக்கமும் (Campaign) இந்தியா முழுவதும் நடத்தப்படல் வேண்டும். உச்சநீதிமன்றம் முன்வந்து இவைகளைத் தடை செய்ய முன்வருதல்மூலம் பொதுநலம், பொது ஒழுக்கம் காப்பற்றப்படக்கூடும்” என்று கூறியுள்ளார்.