பட்டப்பகலில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்: திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!
திருப்பூரில் பட்டப்பகலில் 20 வயது இளம்பெண் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில், அவரை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் 60 அடி சாலையில், 20 வயது இளம் பெண் சரண்யா மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், சரண்யாவின் வாகனத்தை வழிமறித்து பின்னர் அரிவாளால் சரண்யாவின் கை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்கள்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் கூச்சலிட, அந்த மர்ம நபர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சரண்யாவின் கணவர் ரமேஷ் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும், அவர்தான் சரண்யாவை வெட்டியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.
திருப்பூரில் பட்டப்பகலில் இளம் பெண் ஒருவரை அவரது கணவரே அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran