வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : புதன், 11 ஜூன் 2014 (19:34 IST)

இளம்பெண்ணை கத்தி முனையில் கடத்தி வாலிபர் சில்மிஷம்: சாமர்த்தியமாக தப்பிய பெண்

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர் ராதா (வயது 18. பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். ராதா வேலை செய்யும் கடைக்கு அருகில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த தாகூர் (20) என்பவர் வேலை பார்த்தார்.
 
அவர் தினமும் ராதா பேருந்தில் இறங்கி கடைக்கு நடந்து செல்லும்போது அவரது அழகில் மயங்கி காதலிக்க ஆரம்பித்தார். ஒருநாள் வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல ராதா பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்ற போது பின் தொடர்ந்த தாகூர் வழிமறித்து ராதாவிடம் அவரை காதலிப்பதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராதா இந்த வேலை எல்லாம் என்னிடம் வைத்து கொள்ள வேண்டாம் என்று கூறினார். உடனே தாகூர் உன்னை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என கூறி தொல்லை செய்தார். தாகூரிடம் இருந்து தப்பிக்க நினைத்த ராதா எது பேச வேண்டும் என்றாலும் என் பெற்றோரிடம் பேசிக் கொள்ளவும் என கூறி தப்பி சென்றார். ஆனால் தாகூர் ராதாவுக்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்து சென்று ராதாவின் வீட்டை தெரிந்து கொண்டார்.
 
அதன் பின்னர் தாகூர் தினமும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாகூர் தனது நண்பனை ராதாவின் வீட்டுக்கு அழைத்து சென்று ராதாவின் பெற்றோரிடம் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார்.
 
இதைக்கேட்டு பொறுமையாக இருந்த ராதாவின் தந்தை தாகூரிடம் நீங்கள் இஸ்லாமியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் இந்து மதத்தினர். நம் இரு மதத்துக்கும் இடையில் இதுபோன்ற திருமணத்துக்கு பெரியவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு வயது குறைவுதான். உங்கள் பெற்றோரே உங்களுக்கு ஏற்ற அழகான பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பார்கள். அதுவரை காத்திருங்கள். என் மகளை மறந்துவிடுங்கள் என்று அறிவுரை கூறி காப்பி கொடுத்து உபசரித்து அனுப்பினார்.
 
ராதா தனது பெற்றோர் தாகூருக்கு கூறிய அறிவுரையால் அவர் தன்னை பின் தொடர மாட்டார் என நினைத்து சந்தோஷம் அடைந்தார். ஆனால் அந்த சந்தோஷம் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. அடுத்த நாள் காலை பேருந்து நிலையத்தில் தாகூர் காத்திருந்தார். பேருந்தில் இருந்து ராதா இறங்கியதும் தாகூர் மீண்டும் காதல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.

இது குறித்து ராதா தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் தாகூரை எச்சரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தாகூர் ராதாவை கடத்த திட்டமிட்டார். இந்நிலையில் நேற்று இரவு ராதா கடையில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக திருவள்ளுவர் பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்றார். அப்போது முருகாலயா தியேட்டர் அருகில் ராதா செல்லும்போது மோட்டார் சைக்கிளில் தாகூர் நண்பர் ஒருவருடன் வந்து ராதாவை வழிமறித்தார்.
 
அவரிடம் நான் உன் தந்தையிடம் இன்று காலை பேசினேன். அவர் உன்னையும் வைத்து பேசிவிட்டு நல்ல தகவல் கூறுவதாக தெரிவித்துள்ளார். நம் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும். இது குறித்து இன்று இரவே முடிவு செய்து விடலாம். நீ என்னுடன் மோட்டார் சைக்கிளில் ஏறு, நேராக கோட்டூர் சென்று உங்கள் வீட்டில் நம் திருமணம் குறித்து பேசுவோம் என்றார்.
 
தாகூர் மீது சந்தேகம் அடைந்த ராதா அவரிடம் இருந்து தப்பிக்க நீங்கள் பைக்கில் முன்னால் செல்லுங்கள். நான் எப்போதும்போல் பேருந்தில் வருகிறேன் என்று கூறி அங்கிருந்து நழுவ முயன்றார்.அப்போது தாகூர் தயாராக கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ராதாவின் நெஞ்சில் வைத்து ஒழுங்காக மோட்டார் சைக்கிளில் ஏறு. இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த ராதா பயத்தில் தாகூர் கூறியபடி மோட்டார் சைக்கிளில் ஏறினார். மோட்டார் சைக்கிளை தாகூர் ஓட்ட அவர் பின்னால் ராதா அமர்ந்து கொண்டார். ராதா தப்பிக்காமல் இருக்க அவருக்கு பின்னால் தாகூரின் நண்பர் அமர்ந்து கொண்டார். ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேரும் பயணம் செய்தனர்.
 
மோட்டார் சைக்கிள் கோட்டூருக்கு செல்லாமல் ஜமீன்ஊத்துக்குளி நோக்கி சென்றது. அப்போது சந்தேகமடைந்த ராதா கூச்சலிட்டார். அவரை மிரட்டி இருவரும் அமைதியாக்கினார்கள். பின்னர் அந்த பகுதியில் உள்ள அய்யாமலை என்ற வாய்க்கால் பகுதிக்கு சென்று அங்கு தாகூர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
 
இரவு 9 மணிக்கு ஆள் நடமாட்டம் இன்றி நிசப்தமாக அந்த இடம் இருந்தது. அந்த வாய்க்காலை சுற்றி காடுகள் சூழ்ந்து இருந்தன. மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய தாகூர் உணர்ச்சி வசத்தில் ராதாவை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். ஏற்கனவே அச்சத்தில் இருந்த ராதா இந்த சம்பவத்தால் விபரீதம் ஏதேனும் நடந்து விடுமோ? என அஞ்சினார். அவர் தாகூரை தள்ளிவிட்டு தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்தார்.
 
அப்போது தாகூர் கத்தியை எடுத்து ராதா முன் நீட்டியவாறே என்னை ஒழுங்காக காதலி. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள உன் வீட்டாரிடம் கேட்க வேண்டும் என மிரட்டினார். மேலும் என்னை காதலிக்க மறுத்தால் உன் துணியை கிழித்து உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் ஓட விட்டு உன் வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்றார்.

இந்த இடத்தில் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்த ராதா தாகூரிடம் நான் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன். இது குறித்து என் பெற்றோரிடம் நான் பேசுகிறேன். என்னை என் வீட்டுக்கு அழைத்து செல் என்று கெஞ்சினார்.
 
அதன்பின்னர் ராதாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு தாகூர் 9.30 மணியளவில் கோட்டூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ராதாவுடன் பள்ளியில் படித்த தோழியின் தங்கை டியூசன் முடித்துவிட்டு தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். இதற்கிடையில் ராதா தாகூரின் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து தப்பித்தார்.
 
உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்திய தாகூரும், அவரது நண்பரும் ராதாவை துரத்தி சென்றனர். அப்போது அந்த வழியாக தந்தையுடன் வந்த ராதாவின் தோழியின் சகோதரி ராதா ஓடுவதையும், அவரை 2 வாலிபர்கள் துரத்தி செல்வதையும் பார்த்து தனது தந்தையிடம் சம்பவத்தை கூறினார்.
 
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். தோழியின் தந்தையை பார்த்தும் அவரிடம் ராதா தஞ்சமடைந்தார். ராதாவுடன் ஒருவர் நிற்பதை கண்டதும் தாகூரும், அவரது நண்பரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்து மோட்டார் சைக்கிளுடன் தப்பி சென்றனர்.
 
பின்னர் ராதா தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தோழியின் தந்தையிடம் கதறி அழுதார். ஆறுதல் கூறிய அவர் பாதுகாப்பாக பேருந்தில் ஏற்றி நடத்துனரிடம் இந்த பெண்ணை பாதுகாப்பாக பேருந்து நிலையத்தில் இறக்கி விடும்படி கூறினார். மேலும் இதுகுறித்து ராதாவின் வீட்டுக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்ததும் பேருந்து நிலையத்துக்கு ராதாவின் அக்காள் வந்தார்.
 
பேருந்தில் இருந்து இறங்கிய ராதா அக்காளை கண்டதும் ஓடிச்சென்று கட்டியணைத்து அழுதார். அவரை சமாதானம் செய்து ஆறுதல்படுத்திய ராதாவின் அக்காள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு பெற்றோரிடம் தனக்கு நேர்ந்ததை கூறினார். பின்னர் இன்று அதிகாலை ராதாவின் பெற்றோர் மற்றும் அக்காளுடன் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தனர்.
 
அங்கு தாகூர் மீது தன்னை கத்தி முனையில் கடத்தி சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்த தகவலறிந்ததும் தாகூர் மற்றும் அவரது நண்பர் தலை மறைவானார்கள். அவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.