செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 19 டிசம்பர் 2014 (13:18 IST)

மணல் கடத்தலைத் தடுத்தது குற்றமா?: செந்தமிழன் சீமான் கண்டனம்

பாலாற்றில் மணல் எடுத்தவர்களைத் தடுத்த பொதுமக்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டு ஆறுகளில் மணலைச் சுரண்டும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அரசு விதித்திருக்கும் நெறிமுறைகளையும் வரம்புகளையும் மீறி பூமியின் தோலைச் சுரண்டும் கொடூரத்தை மணல் தாதாக்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். அரசிடம் காட்டும் உரிமக் கணக்குக்கும் அள்ளும் மணலுக்கும் கொஞ்சமும் பொருத்தமின்றி மணல் மாபியாக்கள் அநியாய கொள்ளையை அரங்கேற்றி வருகிறார்கள். இதனை அரசுத் தரப்பு அதிகாரிகள் துணிச்சலுடன் தட்டிக் கேட்க வேண்டும். ஆனால், நிறைய இடங்களில் அதிகாரிகளின் துணையுடனேயே அநியாய மணல் அக்கிரமங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

பாலாற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக அங்கிருக்கும் பொதுமக்களும் விவசாயப் பெருமக்களும் அதிகாரிகளிடத்தில் முறையிட்டிருக்கிறார்கள். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், பொதுமக்களே அத்துமீறிய மணல் கடத்தலைத் தட்டிக் கேட்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் மணல் அரக்கர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய காவல்துறை, கடத்தலைத் தடுத்த பொதுமக்கள் மீதே வழக்குப் போட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கையே கேலிக்கூத்தாக்கும் இத்தகைய ஏவல் நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பாலாற்றின் நலன் காக்கப் போராடிய மக்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், அங்கே மணல் கொள்ளை நிகழாதபடி தடுக்கக்கூடிய கோரியும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

சட்டமும் சம்பந்தப்பட்ட துறையும் மௌனமாகி ஆதாய சக்திகளுக்குத் துணை போகும்
போதுதான், மக்கள் தாங்களே குற்றவாளிகளைத் தண்டிக்கத் துணிகிறார்கள். ஆனால், அரசுத்தரப்பு தானும் செய்யாமல், செய்பவர்களையும் விடாமல் தடுப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. மணல் விவகாரத்தில் அதிகாரத் தரப்பின் எண்ணம் மக்கள் நலன் பேணும் எண்ணமாக மாற வேண்டும். தட்டிக் கேட்கும் மக்களுக்கு உற்ற துணையாக அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.