1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (12:35 IST)

கள்ளக்காதல் விவகாரம்: ஆசிரியரை கொன்று வீட்டிற்குள் புதைப்பு

ஆசிரியர் கொலை செய்து வீட்டில் புதைப்பு

கள்ளக்காதல் விவகாரத்தில் பள்ளி ஆசிரியரை கொலை செய்து வீட்டிற்குள் புதைத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
குமரிமாவட்டம் குளச்சல் அருகே இருக்கும் வட்டம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(36). அவர் பாவூர் சத்திரம் அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். அவருக்கு அனுஷா என்ற மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். 
 
கடந்த 6ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சந்தோஷ் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அவரின் மனைவி அனுஷா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
 
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலிசார், சந்தோஷின் செல்போன் எண்ணை சோதனை செய்தனர். அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த பொன்செல்வி என்ற பெண்ணுடன் பலமுறை பேசிவந்தது தெரிய வந்தது. 
 
இதையடுத்து, போலிசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
 
பொன் செல்விக்கு ஏற்கனவே திருமணமாகி, அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஆசிரியர் சந்தோஷ், பள்ளிக்கு செல்லும் போது  பொன்செல்வியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவே நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியது. சந்தோஷ் அடிக்கடி அவரின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். செல்வியின் கணவர் வெளிநாட்டில் இருந்தது அவர்களுக்கு வசதியாக இருந்தது.
 
இந்த விஷயம் வெளியே தெரியவர, பொன்செல்வியின் குடும்பத்தினர் பலமுறை அவரையும், சந்தோஷையும் எச்சரித்துள்ளனர். ஆனால் அவர்கள் தங்கள் உறவை தொடர்ந்து வந்தனர். 
 
இந்நிலையில், சம்பவத்தன்று சந்தோஷ் மது அருந்தி விட்டு பொன்செல்வியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை தெரிந்து கொண்ட பொன்செல்வியின் தந்தை மற்றும் அவரது தம்பி ஆகியோர் அங்கு வந்து சந்தோஷிடம் தகராறு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த அவர்கள், சந்தோஷின் தலையில் கம்பால் அடித்துள்ளனர். அதில் அவர் மயங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
 
இந்த விவகாரம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று நினைத்த அவர்கள், சந்தோஷின் உடலை பொன்செல்வியின் வீட்டு வளாகத்துக்குள்ளேயே புதைத்து விட்டனர். 
 
இதையடுத்து, சந்தோஷின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு போலிசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பொன்செல்வியின் குடும்பத்தினரிடம் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள். 
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.