வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 31 மே 2016 (08:35 IST)

சுற்றுலா சென்ற மாணவர்கள் பலி - மு.க.ஸ்டாலின் இரங்கல்

பள்ளி மாணவர்கள் பலி - மு.க.ஸ்டாலின் இரங்கல்

சோத்துப்பாறைக்கு சுற்றுலா சென்ற போது, பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர் சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறையில் சுற்றுலா பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
 
முகேஷ், மற்றும் கார்த்திகைச் செல்வன் ஆகிய இரு மாணவர்களையும் இழந்து தவிக்கும் பெற்றோருக்கும், சக மாணவ மாணவிகளுக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
துயரத்தில் மூழ்கியிருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறி நிற்கிறேன். வேதனைப்படுகிறேன். அந்த இரு இளைஞர்களை நம்பியிருந்த பெற்றோர்களின் கனவு சிதைந்து போயிருப்பதைக் கண்டு கலங்கி நிற்கிறேன்.
 
மின் கம்பியுடன் இருந்த தென்னை மட்டையை தொட்டதால் ஏற்பட்ட இந்த விபத்தில் காயம்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் 40க்கும் மேற்பட்டோர் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்றும், அதற்கான உரிய சிகிச்சைகளை அரசு மருத்துவர்கள் உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
 
மேலும், இறந்து போன மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இது போன்ற விபத்துக்கள் இனி ஏற்படாமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக மின்வாரியமும், ஆங்காங்கு உள்ள மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.