1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (11:16 IST)

தலித் மாணவி பாலியல் பலாத்காரம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

தர்மபுரியில் தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 
இது  குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜடையம்பட்டியில் பள்ளியில் படிக்கும் 14 வயது தலித் சிறுமி, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இன்னும் ஒருவர் கைது செய்யப்படவில்லை யென்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. மனித தன்மையற்ற இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
 
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பும் சிகிச்சையும் உளவியல் ஆலோசனைகளும் வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருக்கின்றனர். இதை தமிழக அரசு கவனத்தில்கொண்டு இந்த வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு உரிய சிறப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 
முன்னாதாக, தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே 14 வயது தலித் மாணவி ஒருவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை செல்போனில் படம் எடுத்து மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த மாணவி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் தொலைபேசி எண்ணான 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் கொடுத்தார்.
 
 இதைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கெரகோட அள்ளி பகுதியைச் சேர்ந்த ராகுல், ஆர்.கோவிந்தநாதம்பட்டி பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் மற்றும் வாலிபர் சந்தோஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். ஆர்.கோபிநாதம்பட்டியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.