வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 26 மார்ச் 2015 (12:37 IST)

மாணவர் சேர்க்கை: வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசு, பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
ஏழை எளிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு கல்வி வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட கல்வி பெறும் உரிமைச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பதை அறிய இந்தியா முழுவதும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்த சட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கவலையளிப்பவையாக உள்ளன.
 
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் 12 (1) (சி) பிரிவின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் 25 சதவீதம் மாணவர் சேர்க்கை இடங்கள் நலிவடைந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி 2013–14 ஆம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் மொத்தம் 21.40 லட்சம் இடங்கள் நலிவடைந்த பிரிவினரைக்கொண்டு நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
 
ஆனால், இவற்றில் 29 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் மொத்தம் 1.43 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால், இவற்றில் வெறும் 11 சதவீத இடங்கள் மட்டுமே நலிவடைந்த பிரிவினரைக்கொண்டு நிரப்பப்பட்டதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இந்தப் புள்ளி விவரங்கள் 2013–14 ஆம் கல்வி ஆண்டிற்கானவைதான் என்ற போதிலும், கல்வி பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து பின்னர் கடந்த 5 ஆண்டுகளாகவே இதே நிலைதான் நிலவுவதாக ஆய்வு தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
 
தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் முறையாக செயல்படுத்தப்பட வில்லை என்று தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன். அதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு விவரங்கள் அமைந்துள்ளன. வேறு சில புள்ளிவிவரங்களும் தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்கின்றன.
 
2013–14 ஆம் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி இரு கட்டங்களாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாகவும், அதற்கு பிறகும் வெறும் 31 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பட்டதாகவும் தமிழக அரசின் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.
 
நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி ஒதுக்கப்பட்ட 89,941 இடங்கள் நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவர்களைக்கொண்டு நிரப்பப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கான கல்விக் கட்டணமாக ரூ.26.13 கோடி நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணியும், செயலாளர் சபீதாவும் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
 
ஆனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளி விவரங்களில் மொத்தம் 2,959 மாணவ, மாணவியர் மட்டும்தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கல்வி உரிமை சட்டப் படியான மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
 
கல்வி உரிமைச் சட்டப்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதமே பணக்கார மாணவர்களை கொண்டு தனியார் பள்ளிகள் நிரப்பி விடுகின்றன என்பதையும், அவர்களிடம் பெருமளவில் பணம் வசூலித்துக்கொண்டு அவர்கள் அனைவரையும் நலிவடைந்த பிரிவினராக கணக்கில் காட்டி மக்களை ஏமாற்றுகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
 
கல்வி பெறும் உரிமைச் சட்டம் தமிழகத்தில் இதுவரை எவ்வாறு செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, வரும் கல்வியாண்டில் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.