வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:09 IST)

சென்னை திரும்பாத ஆளுநர் ; தள்ளிப்போன சசிகலா பதவியேற்பு - பின்னணி என்ன?

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் சென்னை வராத சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். 
 
அதேபோல், சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தையும், பதவியேற்கும் அமைச்சரவை பட்டியலையும் சசிகலா தரப்பு ஆளுநரிடம் வழங்கியிருந்தது.
 
இதையடுத்து எந்த நேரத்திலும் சசிகலா முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. முதலில் 9ம் தேதி அவர் முதல்வராக பதவியேற்பார் எனக்கூறப்பட்டது. ஆனால், அவர் 7ம் தேதியே (இன்று) பதவியேற்கிறார் என செய்திகள் வெளியானது. அதற்காக சென்னை நூற்றாண்டு வளாகத்தில் ஏற்பாடுகள் தீவீரமாக நடந்தன. அதிமுக கட்சி மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவு பறந்தது.  அதிமுக அமைச்சர்கள் அதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.  எனவே, டெல்லி சென்றிருந்த ஆளுநர், இன்று சென்னை திரும்பி, சசிகலாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால், சென்னை திரும்பாமல், ஆளுநர் மும்பைக்கு சென்றுவிட்டார். இதனால், சசிகலா பதவியேற்பு விழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மகனின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காகத்தான் வித்யாசாகர் ராவ் டெல்லிக்கு சென்றிருந்தார். அப்போது, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரை சந்தித்து தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதித்ததாக தெரிகிறது. மேலும், சசிகலாவை முதல்வராக நியமிப்பது தொடர்பாக சில சட்ட வல்லுனர்களுடன் வித்யாசாகர் ஆலோசனை செய்ததாக தெரிகிறது. அதன் பின், அவர் சென்னை திரும்பாமல், அங்கிருந்து மும்பை சென்றுவிட்டார்.
 
இது சசிகலா தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து இன்னும் ஒருவாரத்தில், உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ள நிலையில், சசிகலாவை முதல்வராக நியமிப்பது குறித்து ஆளுநர் மத்திய அரசிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
 
இதனால் சசிகலா முதல்வராக பதவியேற்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், ஆளுநர் சென்னை எப்போது திரும்பினாலும், அனைத்து ஏற்பாடுகளையும் தயாராக வைத்துக் கொண்டு காத்திருக்கிறது சசிகலா தரப்பு...