வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2017 (18:03 IST)

ஓபிஎஸ் அணிக்கு மேலும் ஓரு அமைச்சர்?: அப்செட்டில் சசி ஆதரவு கே.சி.வீரமணி!

ஓபிஎஸ் அணிக்கு மேலும் ஓரு அமைச்சர்?: அப்செட்டில் சசி ஆதரவு கே.சி.வீரமணி!

சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டசபையில் வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை தொகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அமைச்சர் கே.சி.வீரமணிக்கு, தொகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டங்களில் ஈடுபட்டும் வருவதால் அவர் அப்செட்டில் உள்ளார்.


 
 
புதுப்பேட்டை எம்எஜிஆர் சிலை அருகே தீபா பேரவையை சேர்ந்த அதிமுகவினர் கருப்பு கொடி கட்டி அங்கு வந்த அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை பார்த்த அவர் காரில் இருந்து கீழே இறங்கி அவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.
 
ஆனால் அவர்கள், சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பின்போது சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்தது ஏன். ஜெயலலிதாவுக்காக வாக்களித்த மக்களைக் கேட்காமல், நீங்கள் எப்படி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று கேள்விக்கணைகளை தொடுத்தனர். இதனால் பதில் அளிக்க முடியாமல் அமைச்சர் திணறினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
 
மேலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடு ரோட்டில் கருப்பு கொடிகளை நட்டு வைத்தனர். மேலும் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க சென்றார் அமைச்சர், அங்கும் அவருக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது. இதனால் மனம் வெறுத்துப்போன அவர், ஜெயலலிதா தலைமையில் மகிழ்ச்சியாக செயல்பட்டு வந்தோம். ஆனால் இப்போது எங்களால் மகிழ்ச்சியாக செயல்பட முடியவில்லை. இதனால் அரசியல் வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது என கூறியுள்ளார்.
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்ததால் தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தான் எங்கு சென்றாலும் எதிர்ப்பு வருகிறது. இதனால் தொகுதி மக்களிடையே தனக்கு இருந்த செல்வாக்கு குறைந்து விட்டதாக அப்செட்டில் தனக்கு நெருக்கமானவர்களிடம் அமைச்சர் கூறியதாக தகவல் வருகிறது. இதனையடுத்து குறைந்த செல்வாக்கை மீட்க அவர் ஓபிஎஸ் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.