1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (12:31 IST)

தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்த சசிகலா: பொதுச்செயலாளர் ஆனது செல்லுமா?

தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்த சசிகலா: பொதுச்செயலாளர் ஆனது செல்லுமா?

அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும், அது கட்சி விதிகளுக்கு எதிரானது எனவும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு புகார் அளித்திருந்தது.


 
 
அதிமுகவின் சட்ட விதிகளின் படி கட்சியில் சேர்ந்து 5 வருடங்கள் தொடர்ந்து உறுப்பினராக இருந்த ஒருவர் தான் பொதுச்செயலாளராக முடியும். அதே நேரத்தில் பொதுச்செயலாளரை பொதுக்குழு மற்றும் அதிமுக தொண்டர்களால் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
 
தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான வழிமுறையே அதிமுக விதிகளில் இல்லை. ஆனால் இதனை எல்லாம் மீறி அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். எனவே இதனை எதிர்த்து மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.
 
இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஓபிஎஸ் அணியினரும் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கம் அளிக்க சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
 
இந்த விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் நேரடியாக சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் சிறைக்கே அனுப்பி வைக்கப்பட்டது. பிப்ரவரி 28-ஆம் தேதி அதாவது இன்றுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
 
அதன்படி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பு பதில் விளக்கத்தை அவரது வழக்கறிஞர் இன்று தாக்கல் செய்தார். அதில் தான் உரிய விதிமுறைகளின்படிதான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக சசிகலா விளக்கம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.