போயஸ் கார்டன் வீடு யாருக்கு சொந்தம்? - திவாகரன் மகன் பேட்டி


Murugan| Last Updated: திங்கள், 19 ஜூன் 2017 (16:30 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் வீடு யாருக்கும் சொந்தம் என சசிகலாதான் முடிவு செய்வார் என சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவர் வசித்து வந்த போயஸ்கார்டன் வீடு யாருக்கு சொந்தம் என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது. தற்போது அந்த வீடு சசிகலா தரப்பின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தினர் அங்கு காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
 
ஒருபக்கம், அந்த வீட்டை ஜெ.வின் நினைவு இல்லமாக மாற்றுவோம் என தமிழக அரசு கூறிவருகிறது.
 
இந்நிலையில், சமீபத்தில் அந்த வீட்டிற்கு ஜெ.வின் அண்ணன் மகள் தீபா சென்ற போது அங்கு களோபரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பரபரப்பான பல சம்பவங்கள் அங்கு அரங்கேறின. மேலும், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தீபா,  அந்த வீடு எனக்கும், என் சகோதரர் தீபக் ஆகியோருக்கு மட்டுமே சொந்தம். அது எனது பாட்டியும், அத்தையும் வாங்கிய வீடு. சிறுவயது முதல் நாங்கள் வளர்ந்த வீடு. அதை நினைவு இல்லமாக மாற்ற அனுமதிக்கமாட்டோம் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் “போயஸ்கார்டன் வீடு குறித்து ஜெயலலிதா உயில் ஏதேனும் எழுதி வைத்துள்ளாரா என்பது சசிகலாவிற்குதான் தெரியும். தீபா பற்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. எனவே, போயஸ்கார்டன் வீடு யாருக்கு சொந்தம் என சசிகலாதான் கூறமுடியும்” என அவர் கருத்து தெரிவித்தார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :