ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் சசிகலா?


Murugan| Last Updated: செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:08 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அவரின் தோழி சசிகலா, அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார். அதன் பின், சசிகலாவே தமிழக முதல்வராக வேண்டும் என தம்பிதுரை உள்ளிட்ட அமைச்சர்கள் கோரிக்கை வைத்தனர். சசிகலா தர்ப்பும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
 
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிமுக கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவரையே முதல்வராக நியமிக்க வேண்டும் என முதல்வர் ஓ.பி.எஸ் தீர்மானம் நிறைவேற்றினார். எனவே, தமிழக முதல்வராக சசிகலா எப்போது வேண்டுமானாலும் நியமிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில், இன்று அவர் முதல்வராக பதவியேற்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை திரும்பாததால் அந்த விழா தள்ளிப்போனது.
 
ஒருவேளை சசிகலா முதல்வராக பதவியேற்றால், 6 மாதத்திற்கு ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே, அவர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அங்கு சசிகலாவிற்கு கடுமையான எதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே,   அவர் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அந்த தொகுதி எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். அதனால் அந்த தொகுதி அதிமுகவின் கோட்டை என அழைக்கப்படுகிறது.
 
ஆனால், சசிகலாவிற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதால், அவர் அங்கு வெற்றி பெறுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :