வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 9 ஜூலை 2014 (13:59 IST)

சங்கரராமன் கொலை வழக்கில் 23 பேர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்பட 23 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 3.9.2004ல் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. ‘குற்றசாட்டிற்கு போதுமான ஆதாரம் இல்லை, குற்றச்சதி செய்ததாக கூறப்படுவதை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை‘ என்று கூறி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார். இதனிடையே கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா உள்பட பல்வேறு தரப்பினர் ‘வழக்கை மேல் முறையீடு செய்ய வேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்தனர். 
 
இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டபோது, ‘சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்ய புதுவை அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான கோப்பு தயார் செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது கவர்னரும் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார். விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்படும்‘ என்றார்.