வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 15 ஜூலை 2017 (11:50 IST)

கரூரில் மணல் கொள்ளை - ரூ.1050 மதிப்புடைய மணலின் விலை ரூ.13 ஆயிரம் (வீடியோ)

கரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அரசு மணல் குவாரிகள் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் மாயனூர் காவிரி ஆற்றிலும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் இலாலாபேட்டை பகுதியிலும் உள்ள காவிரி ஆற்றில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. 


 

 
மணல் கொள்ளையிலிருந்து கட்டுமானப்பணிகளை காப்பதற்காக தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் மாதத்தில் சில நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் ஏற்கனவே தனியார் மணல் ரீச் எடுத்து நடத்தியவர்கள் மணல்களை ஆற்றிலிருந்து எடுத்து அதை செகண்ட் சேல்ஸ் என்ற பெயரில் இரண்டு யூனிட் ரூ.3600 க்கு விற்றனர். ஆனால் அந்த சம்பவத்தை மணல் கொள்ளை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருதி, அந்த மணல் கொள்ளையை கண்டித்து பொதுப்பணித்துறை மூலம் அரசே இனி மணல் குவாரிகளை நடத்தும் என்றும் அறிவித்திருந்தார்.
 
ஆனால் அன்று முதல் தற்போது வரை மணல் கொள்ளை விஸ்வரூபமெடுத்து வருகின்றது. என்னவென்றால் தனியாரிடம் ரூ 3600 க்கு மணல் எடுத்து வந்தவர்களிடம் இருந்து அரசு மக்களையும், கட்டுமானத்தொழிலாளர்களையும் காப்பதாக கூறி, அரசு மூலம் பொதுப்பணித்துறை மூலமாக ஒரு யூனிட் மணல் 525 க்கும், 2 யூனிட் மணல் ரூ 1050 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முதல்வர் அறிவித்தார். ஆனால் அவர் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு தான், என்னவென்றால் ஒரு லாரிக்கு மணல் டோக்கன் என்று பொதுப்பணித்துறை மூலமாக அ.தி.மு.க வினர் ஏஜெண்ட் ஆக செயல்பட்டு டோக்கன் விலை ரூ 10 ஆயிரம் என்று நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 
 
இந்த டோக்கனை பெற ரூ 1500 லிருந்து ரூ 3 ஆயிரம் வரை புரோக்கர் கமிஷனாக கொடுக்கப்படுகிறது. இப்படி ஒரு லாரிக்கு ரூ.13 ஆயிரம் செலவு செய்து மணல் ஏற்றுகின்றனர் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுநர்கள். ஏற்கனவே தனியார் ரீச் நிர்வாகத்தினர் ஆங்காங்கே மணல் லாரிகளை சாலையோரம் நிறுத்தாமல் அவர்களே ஒரு டர்ன் பாய்ண்ட் என்று வைத்து அங்கேயே லாரிகளை வரிசைப்பிரகாரம் நிற்க வைத்து சீனியாரிட்டி அடிப்படையில் எந்த லாரிகள் முதலில் வந்ததோ, அந்த லாரியை அனுப்பி பின் படிப்படியாக அனுப்பினர். 
 
ஆனால் தற்போது கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்காக தேசிய நெடுஞ்சாலையின் ஒரத்தில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக லாரிகளை நிறுத்துகிறார்கள். மேலும், எந்த வித அடிப்படை என்று அவர்களுக்கே தெரியாமல் அமைச்சர்,ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மற்றும் எதிர்கட்சி எம்.எல்.ஏ கோட்டா என அவரவர்களுக்கு லாரிகளை சாலையில் நிரப்பியதோடு, காவிரி ஆற்றில் உள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். 
 
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கள்ளப்பள்ளி பஞ்சாயத்து தகவல் பலகையில் நீதிமன்றமே, நீதித்துறையே கண் திற என்றும், இலாலாபேட்டை காவேரி ஆற்றில் மணல் அள்ளியது போதும், அரசியல் வாதிகளே சம்பாதித்தது போதும், லாரிக்கு டோக்கன் வழங்கியது போதும், விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே மீறினால் ஊர் பொதுமக்கள் என்று எழுதி அதற்கு கீழ் அரிவாள் வரைந்து தங்களது எதிர்ப்பை காண்பித்துள்ளனர். 
 
தமிழக முதல்வர் மணல் கொள்ளையை ஒழிக்க அரசே பொதுப்பணித்துறை மூலமாக மணல் குறைந்த விலையில் மணல் அள்ளுவதற்கான திட்டங்களை தீட்டினால் ரூ.1050 மதிப்புள்ள மணலுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு டோக்கன் கொடுக்கப்படுகிறது. இந்த டோக்கனில் அமைச்சருக்கு எவ்வளவு? ஆளுங்கட்சிக்கு எவ்வளவு? தட்டிக்கேட்க வேண்டிய எதிர்கட்சி தன் செயலை செய்யாமல் இருப்பதற்கு  எவ்வளவு? என்று நடுநிலையாளர்களும் சமூக நல ஆர்வலர்களும் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

சி - ஆனந்தகுமார்