வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 11 ஜூலை 2014 (12:54 IST)

திருமணமான ஒரே மாதத்தில் கல்லூரி மாணவி கொலை: கணவர் வெறிச்செயல்

திருமணமான ஒரே மாதத்தில் கல்லூரிக்குச் சென்று வந்த மனைவியை சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் எருமாபாளையம் குதிரை பாலி காடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (28) என்ற கார் டிரைவருக்கும், நாமக்கல் மாவட்டம் எலச்சி பாளையத்தை அடுத்த இலுப்புளி கிராமத்தை சேர்ந்த தமிழரசி (20) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த மாதம் 4 ஆம் தேதி திருமணம் நடந்தது.
 
தமிழரசி நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்தார். திருமணத்துக்குப் பிறகு கணவர் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். செல்போன் ஒன்றும் அவர் வைத்திருந்தார். மாணவி தமிழரசி செல்போனுக்கு அடிக்கடி போன் வரும். நேற்று இரவும் போன் வந்துள்ளது. அப்போது தமிழரசி போனில் சிரித்து பேசியதாக கூறப்படுகிறது. கணவர் சந்தேகப்பட்டு மனைவியிடம் விசாரித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
 
ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கினார். இதில் சிறிது நேரத்தில் தமிழரசி துடிதுடித்து இறந்தார். பின்னர் தனது தாயார் சின்ன பிள்ளையிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். விடிய விடிய தூங்காமல் தவித்த இருவரும் இன்று காலை கிச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினார்கள். பின்னர் டவுன் உதவி கமிஷனர் ராஜேந்திரன், கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். அதன் பிறகு கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் பிணத்தை கைப்பற்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியை கொலை செய்த கோவிந்தராஜை கைது செய்து விசாரித்தனர். விசாரணையின்போது அவர் கூறியதாவது:-
 
எனது மனைவி அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். நேற்று இரவு பேசியபோது அது பற்றி நான் கேட்டேன். அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொன்று விட்டேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
கொலைக்கு பயன்படுத்திய துப்பட்டாவையும் காவல்துறையினர் கைப்பற்றினார்கள். தொடர்ந்து கோவிந்தராஜ் மற்றும் அவரது தாயார் சின்னப்பிள்ளையிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தமிழரசி கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது தந்தை ஈஸ்வரன், தாயார் லட்சுமி மற்றும் உறவினர்கள் இன்று காலை சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்குச் சென்று தமிழரசியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
 
அப்போது தமிழரசியின் தாயார் லட்சுமி கண்ணீர் மல்க கூறியதாவது:-
 
எங்களது மகளை நாங்கள் செல்லமாக வளர்த்தோம். ஆனால் அந்த பாவி எங்கள் மகளை கொன்றுவிட்டான். இப்படி நடக்கும் என நாங்கள் சிறிதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நேற்று இரவு 8 மணி அளவில் தமிழரசி என்னிடம் செல்போனில் பேசி அம்மா, நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். என் கணவர் என்னை நன்றாக கவனித்து கொள்கிறார் என கூறினார். ஆனால் இரவு அவளை அந்த பாவி கொன்றுவிட்டான். அவள் இறந்த விவரம் கூட எங்களுக்கு யாரும் தெரிவிக்கவில்லை. காவல்துறையினர் கூறிய பின்னர்தான் தமிழரசி கொலையானது தெரியும். எங்கள் மகள் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.