வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (20:15 IST)

சென்னை மேயர் சைதை துரைசாமி கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை? பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் தகவல்

சென்னை மேயர் சைதை துரைசாமி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மேயர் சைதை துரைசாமி, இதற்கு முன்பு மேயர்களாக இருந்த மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். 
 
கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்திலும் சைதை துரைசாமி மீது குற்றச்சாட்டுகளைக் கூறினார். இதற்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மேயர் சைதை துரைசாமி கீழ்ராஜமங்கலத்தில் 10 ஏக்கரில் பண்ணை வீடு கட்டி இருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்தப் புகார் எழுந்த சில தினங்களுக்குள் மேயர் சைதை துரைசாமி அதிமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரைக் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக் கூடாது. எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் பெயரைச் சுவரொட்டிகளிலோ அல்லது பதாகைகளிலோ போடக் கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
 
வெள்ளிக்கிழமை இரவு முதலே இந்தப் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் சைதை துரைசாமி மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக இன்று காலை சென்னையில் தகவல் பரவியது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையும் இது பற்றிப் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதற்கிடையே இந்தியா டுடே சார்பில் சென்னை சிறந்த நகரமாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு வழங்கப்படும் விருதைப் பெறுவதற்காக மேயர் சைதை துரைசாமி டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த ராஜினாமா தகவல் பரவி வருவதற்குக் காரணம் ஐ.ஏ.எஸ். அதிகாரி மாறுதல்தான் என்றும் ஒரு செய்தி உலவுகிறது. எனவே இதுகுறித்து டெல்லியில் உள்ள சைதை துரைசாமியிடம் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அதனை மறுத்துவிட்டார். மேலும் கடுமையாகப் பேசிய அவர், "செத்தவன்கிட்டயே செத்துட்டியா?" என்று கேட்பதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகும் தகவல் உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.