வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: சனி, 28 மார்ச் 2015 (19:06 IST)

சகாயம் ஐஏஎஸ் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த அதிமுக பிரமுகரால் பரபரப்பு

சகாயம் விசாரணை அலுவலகத்திற்குள் சென்று அவரது அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரையில் பத்தாம் கட்டமாக விசாரணை நடத்தி வருகிறார். அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 11 மணிக்கு அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் சகாயம் வந்தார். பல்வேறு துறை அதிகாரிகள் அளித்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்து கொண்டு இருந்தார். இதனால், மாடியில் அமைந்துள்ள அவரது அலுவலக பகுதிக்கு யாரையும் அனுமதிக்கவில்லை.
 
இந்த நிலையில், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் மச்சக்குமார் திடீரென்று ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார். ‘சகாயம் இருக்கிறாரா?‘ என்று கேட்டபடி மாடிக்கு சென்று காவல்துறையினரின் பாதுகாப்பை மீறி சகாயம் அலுவலகத்திற்குள் புகுந்தார். அங்கு சகாயம் அமர்ந்திருந்த அறைக்குள் வேகமாக நுழைய முயன்றார். சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர், அவரை தடுத்து நிறுத்தினர். காவல்துறையினரிடம் ‘சகாயத்தை சந்திக்க வேண்டும்‘ என்றார். காவல்துறையினர் அனுமதிக்க மறுத்தனர். ‘அனுமதிக்காவிட்டால் அவரது செல்போன் நம்பரை சொல்லுங்கள்‘ என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
 
இதைத்தொடர்ந்து அவரை பாதுகாப்பு அதிகாரி கையை பிடித்து இழுத்து தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று விசாரித்து, வெளியேற்றினார். வெளியே வந்த மச்சக்குமார் கூறும்போது, ‘கிரானைட் குவாரிகளால் மேலூர் பகுதியில் விவசாயம் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. சகாயத்தை நேரில் சந்தித்து இதை விளக்குவதற்காக வந்தேன். காவல்துறையினர் அனுமதிக்காமல் தடுத்து விட்டனர்‘ என்றார்.