வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : புதன், 17 டிசம்பர் 2014 (09:10 IST)

மதுரையிலிருந்து உயிருடன் திரும்ப முடியாது: ஐஏஎஸ் சகாயத்திற்கு கொலை மிரட்டல்

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், “உடனே மதுரையை விட்டு வெளியேறாவிட்டால் உயிருடன் திரும்ப முடியாது” என்று கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
 
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
 
கடந்த 4 ஆம் தேதி அவர் மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அறையில் முதல் கட்ட விசாரணையை தொடங்கினார். அவரிடம் பொதுமக்கள் பலர் புகார் மனுக்களை கொடுத்தனர். மேலும் அவர் கிரானைட் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தபாலில் மதுரை, சென்னை முகவரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 
இதைத் தொடர்ந்து தபால் மூலமும் பலர் தங்கள் புகார் மனுக்களை அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் 2 ஆம் கட்ட விசாரணையை தொடங்கினார்.

2 ஆவது நாளான நேற்று காலை அவர் வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்தார். முதலில் தபாலில் வந்த மனுக்களை, ஒவ்வொன்றாக பிரித்து பார்வையிட்டார். அப்போது ஒரு கவரைக் கிழித்து பார்த்து, அதை படித்த போது கடும் அதிர்ச்சி அடைந்தார். அதில் 2 பக்க அளவில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
 
உடனே சகாயம் இது குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
 
இந்த தகவலை அறிந்ததும் நிருபர்கள் இக்கடிதம் குறித்து சகாயத்திடம் கேட்டனர். அப்போது கடிதம் குறித்து சகாயத்தின் உதவியாளர் தேவசேனாதிபதி நிருபர்களிடம் வாசித்துக் காட்டினார்.
 
அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்ததாவது:-
 
உயர்திரு சட்டப்பணி ஆணையர் சகாயம் அவர்களுக்கு, உங்கள் குடிமகன் குமார் எழுதுவது, கிரானைட் குவாரிகளை எனது உறவினர்களும், எனக்கு வேண்டப்பட்டவர்களும் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தக்கூடாது. அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது.
 
உடனே நீங்கள் மதுரையை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் நீங்கள் உயிருடன் திரும்ப முடியாது. தொந்தரவு கொடுத்தால் கல்குவாரியில் உங்களை சமாதியாக்கி விடுவோம். உங்கள் உடல் கறியை அப்படியே கூறு போட்டு விடுவோம்.
 
என் மனைவி பிரேமராணி நெடுஞ்சாலைத்துறையில் வேலை பார்க்கிறார். அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தற்போது ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உதவி செயற்பொறியாளராக உள்ளார். அவருக்கு செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கி, சேலத்திற்கு மாற்ற வேண்டும். உடனே விசாரணையை நிறுத்திவிட்டு, திரும்பிப் போய் விடுங்கள் என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
 
டிசம்பர் 15 ஆம் தேதி தேதியிட்டு 2 பக்கங்களுக்கு இந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது.
 
இது குறித்து விசாரிக்க நகர் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் பெத்துராஜ், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சந்தித்தார். பின்னர் வெளியே வந்த அவரிடம் கடிதம் குறித்து கேட்ட போது, ஆய்வாளர் எதுவும் கூறவில்லை.
 
சகாயத்திற்கு கொலைமிரட்டல் விடுத்த கடிதம் எந்த ஊரிலிருந்து அனுப்பப்பட்டது. அதை அனுப்பியவர்கள் யார், உண்மையிலேயே அவரை மிரட்ட தான் கடிதம் எழுதப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
கடந்த விசாரணையின் போதே சகாயத்தை மர்ம நபர்கள் கண்காணிப்பதாகவும், அவரது அறையில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
 
இந்த நிலையில் அவருக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.