1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 11 நவம்பர் 2016 (13:23 IST)

ரூ.2 ஆயிரம் வியாபாரமாகும் டீ கடையில் நேற்று 20 ஆயிரம் விற்பனையால் அதிர்ந்த வியாபாரி

வழக்கமாக இரண்டாயிரம் விற்பனையாகும் தனது டீ கடையில், நேற்று ஒருநாள் மட்டும் இருபதாயிரம் ரூபாய் விற்பனையானதாக அக்கடையின் உரிமையாளர் கூறியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.


 

செவ்வாய்கிழமை [08-11-16] பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனால், பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 100 ரூபாய் மட்டுமே செல்லும் என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

கையில் உள்ள 500, 1000 ரூபாய்களை மக்கள் 100 ரூபாயாக மாற்றுவதால் தற்போது 100 ரூபாய் நோட்டு தான் அதிகபட்ச பணமாக உள்ளது. கையில் உள்ள பணத்தை மாற்றச் சென்றால் அங்கும் 2000 ரூபாய் நோட்டுகளே அதிகப்படியாக வழங்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பின், பெரும்பாலான கடைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுத்து விட்டனர். இந்நிலையில், நேற்று ஒருநாள் மட்டும் இருபதாயிரம் ரூபாய் விற்பனையானதாக அக்கடையின் உரிமையாளர் கூறியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து கடைக்காரரிடம் பேசினோம். கடைக்காரர் ஜார்ஜ் கூறுகையில், ”நேற்று மட்டும் எனது கடையில் ஏறக்குறைய ரூ. 20 ஆயிரம் அளவிற்கு வியாபாரம் ஆனது. ஆமாம், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விட்டு தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டனர்.

மீதி சில்லறை கேட்டபோது உங்களிடம் எப்படி இல்லையோ, அதேபோல்தான் என்னிடமும் இல்லை. எல்லோரும் 500, 1000 ரூபாய் கொடுத்தால், எனக்கு மட்டும் எங்கிருந்து சில்லறை வரும். ஆதலால், சில்லறை கிடைக்கும்போது கொடுத்துவிட்டு 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கிச் செல்லுங்கள்.

இல்லையென்றால், என்னிடம் சில்லறை வரும்பொழுது மீதிச் சில்லறையை தருகிறேன் என்று கூறி அனுப்பி வைத்தேன். தினசரி வாடிக்கையாளர்கள் பலரும் அவ்வாறு நோட்டுகளை கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். இரவு எண்ணிப் பார்த்தால் ரூ. 20 ஆயிரத்திற்கும் மேல் இருந்தது. எனக்கு இது ஒரு புது உணர்வை கொடுத்தது” என்கிறார் கிண்டலாக..

ஆச்சர்யத்தில் மூழ்கிய நாமும், சிரித்துக்கொண்டு வரவேண்டியது ஆயிற்று..