வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 20 டிசம்பர் 2015 (14:05 IST)

மேலும் ரூ.2,000 கோடி வழங்க அருண் ஜேட்லியிடம் ஜெயலலிதா கோரிக்கை

மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத்திற்காக மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
 
முதலமைச்சர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் முதலமைச்சர், தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை பற்றி எடுத்துக் கூறினார்.
 
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட மற்ற மாவட்டங்களில் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் விளக்கமாக கூறினார். முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த போதிலும் வரலாறு காணாத மழையால் பாதிப்பை ஏற்படுத்தி, மத்திய அரசிடம் நிதி உதவியை எதிர்பார்க்க வைத்துள்ளது.
 
இந்த நேரத்தில் தமிழ் நாட்டுக்கு ரூ.1000 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கிய பிரதமருக்கும், நிதி மந்திரிக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்து கொண்டார். மழை வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அரசிடம் தமிழகம் சார்பில் நவம்பர் 23 ஆம் தேதி கொடுக்கப்பட்ட அறிக்கையில் ரூ.8,481 கோடி கேட்கப்பட்டிருந்தது.
 
ஆனால் அதன் பிறகு மழை வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதற்கான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் கூறினார்.
 
தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு நிவாரணப் பணிகளை விரைந்து செய்ய மத்திய அரசு மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
 
மத்திய அரசின் உதவி உடனடியாக எந்தெந்த துறைகளுக்கு தேவைப்படுகிறது என்பதையும் அருண் ஜேட்லியிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார். அடையார், கூவம் ஆற்றங்கரையோரங்களில் வாழ்ந்த 50 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களை மறு குடியமர்த்துவதை தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு கொண்டிருந்தது.
 
இந்த 50 ஆயிரம் குடும்பங்களில் 25 ஆயிரம் குடும்பங்களை ஏற்கனவே மாநில அரசு கட்டியுள்ள வீடுகளில் குடியமர்த்தும் பணி 2 வாரங்களில் தொடங்க உள்ளது. மீதமுள்ள 25 ஆயிரம் குடும்பங்களுக்கும் மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் குடும்பங்களுக்கு சிறப்புத் திட்டம் மூலம் வீடுகள் வழங்க வேண்டியதுள்ளது.
 
இந்த சிறப்புத் திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி தேவை. மாபெரும் இந்த வீட்டு வசதி சிறப்புத் திட்டத்துக்கு பிரதமர் உதவ வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
 
முதலமைச்சர் கடந்த 9 ஆம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இன்சூரன்ஸ் தொகை வழங்குவது உள்பட பல்வேறு சலுகைகள் வழங்க கோரிக்கை விடுத்திருந்தார்.
 
அதுபோல வங்கிக் கடன் களுக்கான தவணைத் தொகைகள் வழங்குவதிலும் சலுகை அளிக்குமாறு கேட்டு இருந்தார். மேலும் வாகனங்கள் வாங்க கடன் வழங்கவும், கல்வி கடன் வழங்கவும், தனி நபர் கடன் வழங்கவும் வங்கிகள் ரூ.5 லட்சம் வரை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மாநில வங்கி அதிகாரிகள் கூட்டத்திலும் இது பற்றி வலியுறுத்தப்பட்டது.
 
வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் செய்யப்பட்டு வரும் நிவாரண உதவிகள் பற்றி மத்திய நிதியமைச்சர் கூறினார். கடந்த 4 வாரங்களில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் 11 ஆயிரம் பேருக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
 
அவரிடம் முதலமைச்சர், மேலும் பலர் இழப்பீடு கேட்டு வருவதை சுட்டிக் காட்டினார். அவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் உதவிகள் செய்யப்பட்டு வருவதாக முதலமைச்சர் கூறினார்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
 
அதன்படி முத்ரா கடன் திட்டம் மாநில அரசு மூலம் மாநில வங்கிகளில் பயனாளிகளுக்கு வழங்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் மற்ற கோரிக்கைகளையும் ஆய்வு செய்து விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய நிதியமைச்சர் உறுதி அளித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.