வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2016 (12:45 IST)

கட்டிங் பிளேயருக்குள் நூதனமாக கடத்தப்பட்ட ரூ.1.80 கோடி மதிப்புள்ள தங்கம்

சென்னைக்கு கட்டிங் பிளேயரில் வைத்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.80 கோடி மதிப்புள்ள தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


 
 
சென்னைக்கு திருச்சியில் இருந்து காரில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், செங்கல்பட்டு அருகே ஜி.எஸ்.டி. சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
 
இதில் ஒரு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளையும், தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், அந்தக் காரில் இருந்த கட்டிங் பிளேயர் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது.
 
இதையடுத்து கட்டிங் பிளேயரை ஆய்வு செய்தபோது கட்டிங் பிளேயரின் கைப்பிடியின், ரப்பர் உறைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவது தெரியவந்தது. 
 
இதில் இரும்பு கைபிடியை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக தங்க கம்பிகளைப் பொருத்தி, அதன் மேல் ரப்பர் உறையைப் பொருத்தியிருப்பதும் தெரியவந்தது.
 
இதையடுத்து, காரில் வந்த நான்கு பேரையும் விசாரித்து அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1.80 கோடி மதிப்புள்ள 5.9 கிலோ எடையுள்ள தங்க நகைகளையும், தங்க கட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 
 
இந்தத் தங்க கடத்தல் தொடர்பாக இது வரை மொத்தம் 8 பேரை கைது செய்யப்பட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.