எஸ்.பி-யை மிரட்டிய ரவுடி கும்பல்; போலீசாருக்கு அடி, உதை : சென்னையில் அதிர்ச்சி


Murugan| Last Updated: வியாழன், 12 அக்டோபர் 2017 (15:45 IST)
சென்னை பெரம்பூரில் மனைவியுடன் சென்ற எஸ்.பி. மற்றும் அவருக்கு உதவ சென்ற போலீசாரை ரவுடி கும்பல் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
பெரம்பூர் மேம்பாலத்திற்கும் ஐ.சி.எஃப் பகுதிக்கும் இடையே உள்ள ராஜீவ் காந்தி நகரில், எஸ்.பி. ஒருவர் தன்னுடைய மனைவியியுடன் நேற்று இரவு 9.30 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் காரை வழிமறித்த ரவுடி கும்பல், காரின் பல இடங்களிலும் அரிவாளால் வெட்டியுள்ளனர். அதன் பின், இருவரிடமிம் இருந்த செல்போன்,பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு ‘எவனுக்கு வேண்டுமானாலும் போன் போடு; என்று கூறி தலையில் அடித்துள்ளனர்.
 
அங்கிருந்து சிறிது தூரம் ஓடி கார் டிரைவர், எஸ்.பி. மற்றும் அவரின் மனைவி ஆகியோர் அவர்களிடமிருந்து தப்பியுள்ளனர். அதன் பின் ஐ.சி.எப் காவல் நிலையத்திற்கு அந்த எஸ்.பி. போன் போட இரண்டு வாகனத்தில் போலீசார் வந்துள்ளனர். ஆனால், அவர்களை கண்டும் பயப்படாத அந்த கும்பல், அங்கு வந்த எஸ்.ஐ உள்ளிட்ட போலீசாரை கன்னத்தில் அறைந்துள்ளனர். 
 
அவர்களிடமிருந்த ஆயுதங்களை கண்டு, உயிர் பிழைத்தால் போதும் என ஓடிய போலீசார் கமாண்டோ படைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் அதிகாலை 5 மணிக்கு கமாண்டோ படை அங்கு வந்துள்ளது. அதற்குள், எஸ்.பி.யின் காரை எடுத்துக்கொண்டு அந்த ரவுடிக்கும்பல் சென்றுவிட்டது. 
 
தற்போதைக்கு அவரின் காரை மட்டும் கண்டுபிடித்திருக்கிறது காவல்துறை. போலீசாரையே மிரட்டி, கன்னத்தில் அறைந்த அந்த ரவுடிக் கும்பல் யார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர். சில ரவுடிகளை மட்டும் எஸ்.பி. அடையாளம் காட்டியுள்ளார். மற்றவர்களை தேடி வருகிறது போலீஸ் தரப்பு.
 
இந்த சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :