வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 24 ஜூன் 2015 (19:40 IST)

போலீசாருக்கு கத்திகுத்து: தப்பி ஓடிய பலே வழிப்பறி திருடர்கள்!

போலீசாரை கத்தியால் குத்தியும், இரும்பு ஆயுதங்களால் தாக்கிவிட்டும் வழிப்பறி திருடர்கள் தப்பியோடிய சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல்நிலைய எஸ்.ஐ. அழகர், நுண்ணறிவு பிரிவு போலீஸ் செந்தில் ஆகிய இருவரும், நேற்று இரவு அரசு பொது மருத்துவமனை அருகிலுள்ள உய்யங்கொண்டான் வாய்க்காலை ஒட்டிய சாலையில் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உய்யங்கொண்டான் ஆறுகண்பாலத்தில் ஒரு கும்பல் மது குடித்துவிட்டு அட்டூழியம் செய்து கொண்டிருந்துள்ளது. இதைக் கண்ட போலீசார், அவர்களை எச்சரித்து அங்கிருந்து போகும்படி கூறியுள்ளனர்.
 
இதில் கடுப்பான அந்த கும்பல், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே, எஸ்.ஐ. அழகர் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்து பேட்ரோல் வண்டியை வர சொல்லியுள்ளார். அப்போது திடீரென அந்த கும்பல் தாக்கியதில், எஸ்.ஐ. அழகருக்கு வலது காது அருகே கத்திகுத்து காயமும், செந்திலுக்கு இடது கண்ணின் மேற்பகுதியில் காயமும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் உடனே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
காயமடைந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ் செந்தில் கூறும்போது, ''சில மாதங்களுக்கு முன் உய்யங்கொண்டான் வாய்க்காலில் நின்றபடி செல்பி எடுத்துக் கொண்ட சிறுவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த கேமிரா, மொபைல் உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஒரு வழிப்பறி கும்பல் பிடுங்கிக் கொண்டதாக புகார் வந்தது. அதன்பிறகு அந்த பகுதியில் அடிக்கடி போலீசார் ரோந்து போய்விட்டு வருவது வழக்கம்.
 
நேற்று இரவும் அந்த பகுதியில் ஒரு கும்பல் இருட்டில் நின்றபடி எல்லோரிடமும் வம்பு செய்து கொண்டிருக்கவே, அவர்களை பிடித்து சென்று காவல் நிலையத்தில் விசாரிக்கலாம் என்று ரோந்து வண்டியை வர சொன்னோம். அப்போது, அந்த கும்பலில் இருந்த ஒருவன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எஸ்.ஐ. அழகரை தாக்க பாய்ந்தான். நான் தடுத்தும் அவன், எஸ்.ஐ. வலது காது அருகே குத்திவிட்டான்.
 
உடனே மற்றொருவன், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் என்னையும் முகத்தில் அடித்தான். அவர்களின் தாக்குதலில் இருந்து நாங்கள் சுதாரித்துகொள்வதற்குள் அந்த கும்பல், அவர்களுடைய வாகனங்களை எடுத்துக் கொண்டு தப்பித்து சென்றுவிட்டார்கள். அந்த பகுதியில் வெளிச்சம் இல்லாததால் அவர்கள் யார் என்று தெரியாத நிலையில், அவர்களை பிடித்தே ஆக வேண்டும் என்று ரத்தம் சொட்ட சொட்ட குற்றவாளிகளை துரத்தி சென்றோம்.
 
நீண்ட நேர துரத்தலின்போது, அவர்களின் வாகனத்தின் டயர் திடீரென வெடித்து நின்றுவிட அவர்கள் இறங்கி ஓடினார்கள். அப்படி தப்பித்து ஓடும்போது, அந்த கும்பலை சேர்ந்த இரண்டு பேருடைய முகம் அடையாளம் தெரிந்தது. அவர்கள், தில்லை நகர் பகுதியை சேர்ந்த வழிபறி திருடர்கள். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். அவர்களை நிச்சயம் பிடித்துவிடுவோம்" என்றார்.
 
போலீசாரையே வழிப்பறி திருடர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி உள்ள சம்பவம், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.