வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 27 ஜூன் 2015 (15:38 IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 2 மணி நிலவரப்படி 53.1 சதவிகித வாக்குப்பதிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி 53.1 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
 

 
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் ராஜினாமா செய்ததையடுத்து, அந்தத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர், தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன், சமூக ஆர்வர்லர் டிராபிக் ராமசாமி உள்பட 28 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
 
ஆர்.கே.நகரில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு 230 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 460 வாக்குப் பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் புகைப்படம், பெயர், சின்னம் ஆகியன வரிசையாக அடுத்தடுத்து இடம்பெறவுள்ளன. வேட்பாளரின் படம் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற முடியும். ஆனால், ஆர்.கே.நகர் தேர்தலில் 28 பேர் போட்டியிடுவதால், ஒரு வாக்குச் சாவடியில் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
 
இதில், இரண்டாவது இயந்திரத்தில் 29வது பொத்தானாக, யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா பொத்தான் இடம்பெற்றுள்ளது. அதேநேரத்தில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வழிசெய்யும் தனியாக இயந்திரம் (வி.வி.பி.டி.) இந்த இடைத் தேர்தலில் பயன்படுத்தப்படவில்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால், உடனடியாக அவற்றை மாற்றம் செய்ய, கூடுதலாக 200 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 100 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
 
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு வாக்குச் சாவடி அதிகாரியும், மூன்று முதல் நான்கு வாக்குச் சாவடி அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 230 வாக்குச் சாவடிகளிலும் சுமார் 1,200 அரசு ஊழியர்கள், அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.
 
மொத்தம் உள்ள 230 வாக்குசாவடிகளில் சுமார் 38 வாக்குசாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான மையங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் 2 வாக்கு சாவடிகளில் வாக்குபதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. புதுவண்ணாரப்பேட்டையில் வாக்குபதிவு மையம் 1 மற்றும் 83ல் மின்னணு இயந்திரம் பழுது ஏற்பட்டதை அடுத்து வாக்குபதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
 
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி 53.1 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.