செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 18 ஜனவரி 2016 (23:06 IST)

நீதி என்றைக்கும் வெல்லும்: கருணாநிதி

நீதி என்றைக்கும் வெல்லும். அந்த நீதியைப் பின்பற்றி நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
"4 ஆண்டுகளில் ஜெயலலிதா சாதித்தது என்ன?" என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் கடந்த நவம்பர் மாதம் ஒரு கட்டுரை வெளியிட்டது.
 
இந்த கட்டுரையை முரசொலி நாளிதழில் வெளியிட்டு, திமுக தலைவர் கருணாநிதி கட்டுரை ஒன்றை எழுதினார்.
 
இதையடுத்து, முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய கருணாநிதி ஆகியோர் மீது, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன், வழக்கு ஆவணங்களை ஜனவரி 18 ஆம் தேதி நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கருணாநிதிக்கும், முரசொலி செல்வத்துக்கும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு தடை உத்தரவு பெறவேண்டாம் என்றும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜக இருப்பதாகவும், கருணாநிதி அறிவித்தார். அதன்படி இன்று காலை அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, திமுக தலைவர் கருணாநிதி அளித்த பதில்கள் இதோ:-
 
கேள்வி :- அவதூறு வழக்கில் இன்று நீங்கள் நேரில் ஆஜராகியிருக்கிறீர்கள். மக்களுக்கு என்ன செய்தியைச் சொல்ல விரும்புகிறீர்கள்?
 
பதில் :-  நீதி என்றைக்கும் வெல்லும். அந்த நீதியைப் பின்பற்றி நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
 
கேள்வி :- இந்த அரசு தொடர்ந்து அவதூறு வழக்குகளைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு சரியானதா? அவர்களுக்கு எதிராக இந்தப் போக்கு தேர்தலில் பிரதிபலிக்குமா?
 
பதில் :- இது சரியான போக்கு அல்ல என்று உச்ச நீதி மன்றமே ஜாடைமாடையாக அண்மையில் கூறியிருக்கிறது. ஆகவே நான் புதிதாக எதுவும் சொல்வதற்கில்லை.
 
கேள்வி :- அனைத்து எதிர்க் கட்சிகளும் அ.தி.மு.க. வுக்கு எதிராக ஒன்று கூட வேண்டு நினைக்கிறீர்களா?
 
பதில் :- அனைத்துக் கட்சிகளை நான் வற்புறுத்த விரும்பவில்லை. அவர்களாகப் பார்த்து எடுக்க வேண்டிய முடிவு இது. அந்த முடிவுக்கு நானும் கட்டுப்படுவேன்.
 
கேள்வி :- அவதூறு வழக்குகளை உங்கள் மீது மட்டுமல்லாமல், எல்லா கட்சிகள் மீதும் தொடுத்துக் கொண்டு வருகிறார்கள். அதை எதிர்த்து அனைத்து எதிர்க் கட்சிகளும் அ.தி.மு.க. வுக்கு எதிராக ஒன்று கூட வேண்டு நினைக்கிறீர்களா? உங்கள் தலைமையின் கீழ் அவர்கள் எல்லாம் வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? எந்தெந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?
 
பதில்: அனைத்துக் கட்சிகளை நான் வற்புறுத்த விரும்பவில்லை. அவர்களாகப் பார்த்து எடுக்க வேண்டிய முடிவு இது. அந்த முடிவுக்கு நானும் கட்டுப்படுவேன்.
 
கேள்வி : இந்த ஆட்சியில் அரசை எதிர்த்து யார் என்ன கூறினாலும், அவர்கள் மீது அவதூறு வழக்கு போடப்படுகிறதே?
 
பதில் : அரசை எதிர்த்து அல்ல; அரசைப் பற்றி யார் என்ன சொன்னாலும், எழுதினாலும் அவதூறு வழக்குப் போடுகிறார்கள் என்றார்