வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (23:09 IST)

மத வன்முறை நாடாக இந்தியா மாறிவிட்டது: ராமதாஸ் குற்றச்சாட்டு

ஒரு காலத்தில் உலகில் எங்கு அடக்குமுறை, மத வன்முறை நடந்தாலும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் தரும் நாடாக இந்தியா திகழ்ந்தது. ஆனால், இப்போது அடக்குமுறையும், மத வன்முறையும் நடக்கும் உலகமாக இந்தியா மாறிவிட்டது என பாமக குற்றம் சாட்டியுள்ளது.
 

 
இது குறித்து  பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: -
 
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் 21 பேர் தங்களின் விருதுகளை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
 
கன்னட எழுத்தாளரும், பகுத்தறிவு சிந்தனையாளருமான கல்புர்கி படுகொலை செய்யப்பட்டதையும், இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களையும் கண்டித்து அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
 
அதே போல, தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் இந்த விஷயத்தில் தங்களின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். எழுத்தாளர்கள் விருதுகளை திரும்பக் கொடுப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது. இது அவ்வளவு வலிமையான எதிர்ப்பு வடிவமா? என்ற வினாவும் ஒரு பக்கம் எழுப்பப்படுகிறது.
 
விருதுகளை திரும்ப ஒப்படைப்பதால் ஒன்றும் நிகழ்ந்து விடாது என்பது உண்மை தான். ஆனால், அறிவுசார்ந்த, பண்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதிகளிடமிருந்து வெளிப்படும் எதிர்ப்பு என்பது அனைத்துத் தரப்பு மக்களிடம் காணப்படும் கொந்தளிப்பின் அடையாளம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
 
எரிமலை வெடிப்பதற்கு முன் வெளியேறும் சாம்பல் மற்றும் வெப்பக்காற்றை போன்றவை என்பதை அரசு உணர வேண்டும். எழுத்தாளர் சமுதாயம் ஒரு விஷயத்திற்காக எதிர்ப்பு தெரிவித்தால் அதை பெரும் அவமானமாக கருத வேண்டும். இந்தியாவில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் நல்ல அறிகுறிகளாக தென்பட வில்லை.
 

கர்நாடகத்தில் இந்துத்துவா அடிப்படைவாதத்திற்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தொடர்ந்து போராடி வந்த கன்னட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கல்பர்கி கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அவரது வீட்டிலேயே மர்ம மனிதர்களால் படுகொலை செய்யப்பட்டார். வலதுசாரி தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தான் அவரை படுகொலை செய்திருக்க வேண்டும் என்பது நன்றாக தெரிந்திருந்தும் அவர்கள் இன்று வரை கைது செய்யப்படவில்லை.
 
உத்தரப்பிரதேசத்தில் தாத்ரி என்ற இடத்தில் மாட்டிறைச்சியை பதுக்கி வைத்திருப்பதாக திட்டமிட்டே வதந்தியை பரப்பி, இஸ்லாமிய முதியவர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்து வழங்கியதற்காக ரஷீத் என்ற தனி உறுப்பினரை பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
 
மேலும், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கசூரியின் நூல் வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்ததற்காக புகழ்பெற்ற எழுத்தாளரும், ஒரு காலத்தில் அத்வானியின் வலதுகரமாக திகழ்ந்தவருமான சுதீந்திர குல்கர்னி மீது சிவசேனா கட்சியினர் கருப்பு மையை ஊற்றியுள்ளனர். இவை அனைத்தும் கண்டிக்கத்தக்கது ஆகும்.
 
ஒரு காலத்தில் உலகில் எங்கு அடக்குமுறை, மத வன்முறை நடந்தாலும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் தரும் நாடாக இந்தியா திகழ்ந்தது. ஆனால், இப்போது அடக்குமுறையும், மத வன்முறையும் நடக்கும் உலகமாக இந்தியா மாறிவிட்டது.
 
இதற்கு முன் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 6 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தது. அப்போது இந்துத்துவா முழக்கங்கள் அவ்வப்போது எழுந்தாலும், அதை வாஜ்பாய் கட்டுப்படுத்தினார். அவரது ஆட்சியில் இந்துத்துவா தீவிரவாத சக்திகள் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தன.
 
குஜராத் வன்முறைக்காக அவர் வருந்தினார். இராஜதர்மம் காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதுமட்டும் அல்ல, அந்த நிகழ்வுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்றும் வாஜ்பாய் வலியுறுத்தினார்.
 
ஆனால், இப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கு எந்த முட்டுக்கட்டையும் போடப்பட்டதாக தெரியவில்லை.  மாட்டிறைச்சி சிக்கலில் இந்துத்துவா அமைப்பினரும், சில மத்திய அமைச்சர்களும் லகான் இல்லாத குதிரைகளைப் போல கட்டுப்பாடின்றி செயல்படுகின்றனர்.
 
ஒட்டுமொத்த சமுதாயமும் இந்நிகழ்வுகளை கண்டிக்கும் நிலையில், பிரதமர் மட்டும் பட்டும்படாமல் ‘‘இந்துக்களும், இஸ்லாமியர்களும் வறுமைக்கு எதிராகத் தான் போராட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
 
இந்நிகழ்வுகளை இதுவரை பிரதமர் கண்டிக்கவில்லை. மாறாக இந்துக்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என லாலு பிரசாத் கூறியதை வைத்து, அவரை இந்துக்களின் எதிரி போல சித்தரிக்க முயல்வதைப் பார்த்தால் அவரது நிலைப்பாடு என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும்.
 
குஜராத் கலவரங்களின் போது பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை, மகிழுந்தில் நாய்க்குட்டி சிக்கிக் கொண்டதுடன் ஒப்பிட்டவரிடம் இருந்து இதைவிட சிறந்த கருத்தை எதிர்பார்த்தால், அது எதிர்பார்ப்பவர்களின் தவறாகவே இருக்கும்.
 
மதச்சார்பின்மையின் அடையாளமாக பார்க்கப்படும் இந்தியாவில் இப்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் நாட்டை மத மோதல்களுக்கு அழைத்துச் செல்லும் ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது. எனவே, இந்தியாவில் மதச்சார்பின்மையை பாதுகாக்க முற்போக்கு சக்திகள் ஒன்று திரள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.