வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 22 டிசம்பர் 2014 (12:34 IST)

ஆர்எஸ்எஸ், பாஜகவின் மதம் மாற்றும் செயல் ஆபத்தானது - ராமதாஸ்

மதமாற்றம் குறித்து ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட அமைப்புகளின் பேச்சும், செயல்களும் சகோதர உணர்வுடன் வாழும் மக்களிடையே சண்டையை உண்டாக்கிவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதமாற்றம் குறித்து ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்து வரும் கருத்துக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. இவர்களின் பேச்சும், செயல்களும் சகோதர உணர்வுடன் வாழும் மக்களிடையே சண்டை உணர்வை ஏற்படுத்திவிடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
 
கொல்கத்தாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், "இந்தியா என்பது இந்துக்களின் தேசம். கடந்த காலங்களில் இழந்ததை இப்போது மீட்போம். கடந்த காலங்களில் மதமாற்றம் செய்யப்பட்டோரை  கட்டாயமாக மறு மதமாற்றம் செய்வோம். அதன்பின் இந்துக்களை எவரும் மதமாற்றம் செய்யாமல் தடுக்க கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றுவோம்’’ எனக் கூறியுள்ளார்.
 
சென்னை, கொச்சி ஆகிய நகரங்களில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, "தேசிய அளவில் கட்டாய மதமாற்றத்தை சட்டத்தைக் கொண்டு வர பாஜக தயாராக உள்ளது. இதற்கு மற்ற கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.
 
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசிய சில நிமிடங்களில் குஜராத் மாநிலம் வல்சாத்  மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களை கிறித்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மாற்றியிருக்கிறார்கள். அண்டை மாநிலமான கேரளத்தில் 30 கிறித்தவர்களை மத மாற்றம் செய்திருப்பதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்தியா முழுவதும் பெருமளவிலான பிற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்றவும் ஆர்எஸ்எஸ்-ன் துணை அமைப்புகள் திட்டமிட்டிருக்கின்றன.
 
இன்னொருபுறம் கிறித்தவர்கள் கிறித்துமஸ் பெருவிழாவை கொண்டாடுவதைத் தடுக்கும் வகையில், கிருஸ்துமஸ் பெருவிழாவன்று நடைபெறவிருக்கும் நல்ஆளுமை நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக பாலஸ்தீன நாட்டிற்கு உலக அரங்கில் காலம்காலமாக இந்தியா அளித்து வந்த ஆதரவை நிரந்தரமாக திரும்பப் பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
 
மேலும் அடுத்த பக்கம்...

மத்திய அரசும், சங் பரிவாரங்களும் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவை இந்து நாடாக்குவதற்கான தொடக்க கட்ட முயற்சிகளாகவே தோன்றுகின்றன. இவை இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையை சீர்குலைப்பதுடன், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தை கேலிக் கூத்தாக்கிவிடும். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக இந்தியா கொடுத்த விலை என்ன? என்பதை அனைவரும் அறிவார்கள். இதையெல்லாம் அறிந்த பிறகும் மதமாற்றம் செய்வது, இந்தியாவை இந்து நாடாக்குவது போன்ற செயல்களில் சங் பரிவாரங்கள் ஈடுபடுவதும், இவற்றை மத்திய ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும்  ஆபத்தானவை ஆகும்.
 
மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாஜக கட்சிக்கு பெரும் வெற்றியை மக்கள் வாரி வழங்கியதன் நோக்கம் என்ன? என்பதை பிரதமர் நரேந்திர மோடியும், அவரை இயக்கும் அமைப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இந்தியா சந்தித்த பின்னடைவை போக்க வேண்டும்; ஏழைகள் படும் அவதியை போக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் காங்கிரசை வீழ்த்தி பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்களே தவிர, இந்து ராஜ்ஜியத்தை அமைப்பதற்காக அல்ல. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவும், இந்திய பொருளாதாரமும் எத்தகைய சீரழிவை சந்தித்து வந்தனவோ, அவை இப்போதும் தொடர்கின்றன. இவற்றை சரி செய்யாமல் தங்களின் சொந்த செயல்திட்டத்தை நிறைவேற்ற முயல்வது நல்லதல்ல.
 
2014 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையில், "இந்தியாவில் பல்வேறு மதங்களிடையே நல்லிணக்கத்தையும், நம்பிக்கையையும் வளர்ப்பதற்காக பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஆலோசனை அமைப்பு ஏற்படுத்தப்படும் (Facilitate the setting up of a permanent Inter-faith Consultative mechanism to promote harmony and trust, under the auspices of religious leaders)" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அதற்கு நேர் எதிரான செயல்கள் தான் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்து அமைப்புகள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டாமா? எனக் கேட்டால், இனி இப்படி நடக்காமல் தடுக்க கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டு வரலாம் என்று மத்திய அரசு கூறுகிறது. இதன்மூலம் தங்களின் இன்னொரு செயல்திட்டத்திற்கு உயிர் கொடுக்க பாஜக முயல்வது கண்டிக்கத்தக்கது.
 
கட்டாய மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அது சிறுபான்மையினருக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து இருக்கிறது. எனவே, மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரும்  முயற்சிகளை கைவிட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் 153(ஏ) பிரிவைப் பயன்படுத்தி மதமாற்றங்களைத் தடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களைத் தடுப்பது உள்ளிட்ட இந்துத்துவா செயல்திட்டங்களை கைவிட்டு, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.