வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (12:46 IST)

காவல்துறை உயர் அதிகாரிகளுடன் செம்மரக் கடத்தல் கும்பலுக்குத் தொடர்பு: பரபரப்பு வாக்குமூலம்

செம்மரக் கடத்தலில் ஆந்திர மாநில காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக, பிடிப்பட்ட தமிழக முன்னாள் எம்.பி சவுந்தரராஜன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


 

 
ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் பரவியுள்ள சேஷாசல வனப் பகுதிகளில் இருந்து செம்மரக்கட்டைகள் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி திருப்பதி வனப் பகுதியில் தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர காவல்துறையினரால்  சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
இந்நிலையில், செம்மர கடத்தலில் தொடர்புடைய முக்கியப்புள்ளிகளை பிடிக்க ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம் முதலிய மாநிலங்களிலும், வங்கதேசம், மியான்மர் நாடுகளிலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 
 
இந்த கடத்தல் சம்பவத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள லட்சுமணன், சினிமா தயாரிப்பாளர் மஸ்தான் கொடுத்த தகவலின் பேரில் மொரீஷியஸ் நாட்டில் பதுங்கியிருந்த கெங்கிரெட்டி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த கடத்தலில் தமிழக முன்னாள் எம்.பி சவுந்தரராஜன், சரவணன், குமார் உட்பட பலரது தொடர்பு குறித்தும் தெரிய வந்துள்ளது.
 
இதைத் தொடர்ந்து, ஆந்திர காவல்துறையினர் பூடானில் பச்சிமாபெங்கா என்ற இடத்தில் பதுங்கியிருந்த முன்னாள் எம்.பி சவுந்தரராஜனை கைது செய்து, அங்கு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 டன் செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.
 
மற்றொரு குழு நேற்று முன்தினம் சென்னை செங்குன்றத்தில் பதுங்கியிருந்த சரவணன், குமார் ஆகிய 2 பேரை கைது செய்து, சவுந்தரராஜனின் குடோனில் இருந்து 5 டன் செம்மரங்களையும் கைப்பற்றினர்.
 
பூடானில் பிடிப்பட்ட சவுந்தரராஜனை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சித்தூர் கொண்டு வந்த காவல்துறையினர், சவுந்தரராஜன் உட்பட சரவணன், குமார் ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். இதில் இந்த விவகாரத்தில் ஆந்திர காவல்துறை உயர் அதிகாரிகளின் தொடர்பு குறித்த திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சவுந்தரராஜனை சித்தூர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு சவுந்தரராஜனை அடுத்த 7 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.