வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2016 (15:02 IST)

திருமாவளவன் அப்பல்லோ விசிட் பின்னணி: எது உண்மை?

திருமாவளவன் அப்பல்லோ விசிட் பின்னணி: எது உண்மை?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.


 
 
முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் பெற்று வீடு திரும்ப பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் மாற்று கட்சி தலைவர்கள் யாரும் மருத்துவமனைக்கு சென்று முதல்வரை சந்தித்து உடல் நலம் விசாரிக்கவில்லை. ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் அப்பல்லோவிற்கு சென்றது அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் திருமாவளவன் அப்பல்லோவிற்கு போனதன் காரணம் குறித்து அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. திருமாவளவன் தானாக முன்வந்து அப்பல்லோவிற்கு செலவில்லை, அவர் வரவழைக்கப்பட்டிருக்கிறார் என்பதே தகவல்.
 
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பதற்றம் அதிகரிக்கவே ஆளுநர் வந்து பார்வையிட்டு சென்றார் ஆனால் அவர் வெளியிட்ட அறிக்கையை யாரும் நம்பவில்லை. அவர் முதல்வரை பார்க்கவில்லை என்பதே பிரதான செய்தியானது. இந்நிலையில் மக்கள் மத்தியில் முதல்வர் நலமாக இருக்கிறார் என்பதை புரியவைக்க எதிர் கட்சியை சேர்ந்த ஒருவர் வந்து கூறினால் தான் முடியும் என கார்டன் தரப்பில் இருந்து திருமாவளவனுக்கு அழைப்பு சென்றிருக்கிறது.
 
திருமாவளவன் தான் இதற்கு சரியான நபர் என தீர்மானித்து அதிமுக முக்கிய அமைச்சர்கள் சசிகலா தரப்பிடம் கூற அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருமாவளவன் மருத்துவமனைக்கு சென்றதும், அங்கிருந்த கெடுபிடிகள் தளர்த்தப்பட்டது. அவரை அதிமுக மூத்த அமைச்சர் ஒருவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாம் தளத்துக்கு அழைத்து சென்றனர்.
 
மருத்துவர்கள் அவரிடம் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கி கூறினர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் முதல்வர் நலமுடன் இருக்கிறார் என்ற தகவலை கூறினார். ஆனால் அவரும் முதல்வரை சந்திக்கவில்லை என்ற தகவலை அந்த பேட்டியின் மூலம் பெற முடிந்தது.
 
திருமாவளவனின் சந்திப்பு ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட்டது என கூறப்படும் தகவலை விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுத்துள்ளது. மருத்துவமனைக்கு யாருடைய அழைப்பின் பேரிலும் நாங்கள் செல்லவில்லை. ஓர் அரசியல் கட்சித் தலைவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார். அரசியல் நாகரிகத்தோடு அவரை சந்திக்கச் சென்றோம் என கூறியுள்ளனர்.