1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (14:03 IST)

போயஸ்கார்டனில் களோபரம் ; தீபக் மூலம் சசிகலா போட்ட திட்டம்? - பின்னணி என்ன?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் இல்லத்தில் நேற்று அவரின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கிடையே எழுந்த களோபரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

 
நேற்று காலை போயஸ் கார்டனுக்கு சென்ற தீபா, ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்த தன்னை உடனடியாக போயஸ் கார்டனுக்கு தனது சகோதரர் தீபக் அழைத்ததாகவும், ஆனால் போயஸ் கார்டன் வந்த தன்னை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் உள்ளே விடாமல் தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.  இதனை சசிகலாவுடன் சேர்ந்து திட்டமிட்டு தீபக் நடத்தியதாக தீபா புகார் கூறினார். 
 
மேலும், போயஸ் கார்டனுக்கு வெளியே தீபா தனது சகோதரர் தீபக்கை சரமாரியாக வசைபாடினார். அப்போது தீபக் அங்கு வர தீபா அவரிடம் தன்னை ஏன் வர சொன்னாய்? நீ தான் வர சொன்னதை எல்லோர் முன்னாடியும் சொல் என கொந்தளித்தார். மேலும், தீபாவின் கணவர் மாதவனும் அங்கே வர, அவரை தீபாவின் டிரைவரும், தீபா பேரவை நிர்வாகியுமான ராஜா ஒருமையில் கண்டபடி திட்டினார். இதை தீபா வேடிக்கை பார்த்தார். இப்படி போயஸ்கார்டனில் நேற்று பல காட்சிகள் அரங்கேறின.
 
இந்நிலையில், தீபாவை போயஸ்கார்டனுக்கு தீபக் வரவழைத்ததன் பின்னணியில் சசிகலா தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது. போயஸ்கார்டனை ஜெ.வின் நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை அறிந்த சசிகலா சமீபத்தில், தீபக்கை பெங்களுக்கு அழைத்து பேசியதாகவும், போயஸ்கார்டன் ஆண் வாரிசான உனக்கே சொந்தம், எனவே, இடையூறாக இருக்கும் தீபாவிடம் நைசாக பேசி அவரிடம் கையெழுத்தை பெற்று விடு என உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. 


 

 
எனவே, சசிகலாவின் உத்தரவுபடி செயல்பட்ட திபக், நேற்று அதிகாலையிலேயே தீபாவை போயஸ்கார்டனுக்கு வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் நிதானமாக பேசிக்கொண்டிருந்ததாகவும், ஒரு கட்டத்திற்கு மேல், சொத்து விஷயத்தில் இருவருக்கும் வாக்குவாதம் எழ, அங்கிருக்கும் சசிகலாவின் புகைப்படத்தை தீபா வெளியே எடுத்து வந்த போட, கார்டன் பாதுகாவலர்களுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத்தான் தன்னை தாக்கினார்கள், கொலை செய்ய முயன்றார்கள் என தீபா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
போயஸ்கார்டனுக்கு தீபா சென்றது 9 மணிக்கு மேல்தான் செய்தியாளர்களுக்கு தெரியவந்தது. ஆனால், சுதாரித்த போலீசார் அங்கு படைகளை குவித்து செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்தது. அதன் பின் தீபாவின் கணவர் மாதவன் மற்றும் ராஜா அங்கே வர அந்த இடம் களோபரம் ஆனது. அனைவரும் அங்கு வந்துவிட அங்கிருந்து நழுவி சென்றுவிட்டார் தீபக். மொத்தத்தில் தீபக் மூலம் காய் நகர்த்திய சசிகலாவின் திட்டம் தோல்வியில் முடிந்ததாகவே தீபாவின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.