1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 25 மார்ச் 2015 (08:03 IST)

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவி: கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கருவுற்ற 10ஆம் வகுப்பு மாணவியின் கருவை கலைக்க அரசு மருத்துவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னையில் 10ஆம் வகுப்பு படித்துவரும் 16 வயது சிறுமி, அவரது வீட்டுக்கு வந்துசென்ற ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
 
தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாத நிலையில் அந்த சிறுமி வீட்டில் உள்ளார். அந்த மாணவியின் வயிற்றில் இருக்கும் கருவை கலைக்கவேண்டும் என்று அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்தும், அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று சென்னையை சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
 
இந்த மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர், கருவை கலைப்பது குறித்து ஆய்வு செய்த அரசு மருத்துவர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
 
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் ஆர்.விஜயகுமார்,''சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையிர் கடந்த 11 ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்து விட்டனர். கரு கலைப்பு சட்டத்தின்படி, பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒப்புதல் வழங்கினால், அந்த கருவை கலைக்கலாம்.
 
இது குறித்து அரசு மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி, கருவை கலைக்க ஒப்புதல் அளித்து விட்டனர். அதற்குள், இந்த மனுதாரர் இந்த நீதிமன்றத்தை நாடியுள்ளார்" என்று கூறி வாதிட்டார். மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் சுதாராமலிங்கம் ஆஜராகி வாதிட்டார். 
 
இதைத் தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "சிறுமியின் கருவை கலைக்க பெற்றோரும், அந்த சிறுமியும் சம்மதம் தெரிவித்துள்ளதால், அந்த கருவை மருத்துவர்கள் விரைவாகக் கலைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்
 
கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பகையை தீர்க்க 13 வயது சிறுமியை சசிகுமார் என்ற வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பம் ஆக்கினான். இதையடுத்து, அந்த கருவை கலைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், அந்த சிறுமியின் வயிற்றில் உள்ள கருவை கலைக்க கடந்த வாரம் உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், மேலும் ஒரு சிறுமியின் வயிற்றில் இருக்கும் கருவை கலைக்கக்க உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.