வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 29 ஜூலை 2014 (11:02 IST)

ரம்ஜான் பண்டிகை: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை யொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ரோசய்யா:

“ரம்ஜான் பண்டிகை என்பது சுயகட்டுப்பாட்டையும், மத ஒற்றுமையையும், பொறுமையையும் ஏற்படுத்தும் விழாவாகும். ரம்ஜான் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்“.

முதலமைச்சர் ஜெயலலிதா:

“தமிழக அரசு, ரமஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்கி வருவதையும், வக்பு நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளதையும், உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியம் ஆயிரம ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதையும் இஸ்லாமிய மக்கள் நன்கு அறிவர். அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம்“.

திமுக தலைவர் கருணாநிதி:

“இஸ்லாம் நெறி வளர்த்த நபிகள் நாயகம் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் வாழ்வியல் முறைகளையே போதித்தார். தாய், தந்தையரிடம் அன்பு செலுத்துங்கள், பசித்தவருக்கு உணவளியுங்கள், நோயாளிகளை நலம் விசாரியுங்கள், பிறருடைய குற்றங்களை தேடி அலையாதீர்கள், பிறர் மீது பொறாமை கொள்ளாதீர் போன்ற வழிகாட்டும் அறிவுரைகளையே போதனைகளாக  வழங்கினார் நபிகள் நாயகம். அவரது போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய மக்களுடன் நான் கலந்து பழகிய பாச உணர்வோடு வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கிறேன்“.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

“தமிழகத்தில் இஸ்லாம் மார்க்கம், தொன்று தொட்டு இருந்து வரும் மார்க்கம். இங்கு இஸ்லாமியர்களும், இந்து மதத்தைச் சார்ந்தவர்களும் வேற்றுமை இல்லாமல் ஒன்றாக பழகும் தன்மை இருந்து வருகிறது. இந்த வகுப்பு ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை“.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:

“மத, இனப் பிரிவுகளிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து, வன்முறைகள் ஒழிந்து நல்லிணக்கம் உருவாக அனை வரும் ஒன்றிணைந்து உழைப்போம்“.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்:

“காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினருக்குச் சோதனை ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்காகக் குரல் கொடுத்து நாட்டின் ஒற்றுமையையும்,  அமைதியையும் காக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது“.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

“நபிகள் நாயகம் காட்டிய நெறிமுறைகளை ஏற்று வாழும் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகிற ரமஜான் திருநாளில் சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம்“.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்:

“உலகமெங்கும் உழைக்கும் வர்க்கம் உயர்வு பெற வேண்டும் என்பதை இந்த புனித திருநாளில் உறுதிமொழியாக ஏற்றுக் கொள்ள  வேண்டும்“.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

“கொடைகளுக்கும், நற்குணங்களுக்கும் உதாரணமாக இஸ்லாமியர்கள் திகழும்போது பாலஸ்தீனத்தில் நிகழும் கொடுமைகள் வேதனையளிக்கின்றன. பாலஸ்தீனம் மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதி நிலவ வகை செய்யப்பட வேண்டும்“.

மேலும் பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.