வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2016 (09:25 IST)

ராம்குமார் இன்று புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்?

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் இன்று அல்லது நாளை புழல் சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில், செங்கோட்டையை ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தன் காதலை ஏற்காததாலும், தன் உருவத்தை பற்றி இழிவாக பேசியதாலும் சுவாதியை கொலை செய்தேன் என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 
 
கைது முயற்சியின் போது, தனது கழுத்தை அறுத்துக் கொண்ட ராம்குமாருக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் சென்னை கொண்டுவரப்பட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
அவர் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் போலீசாரிடம் அவ்வப்போது வாக்குமூலம் அளித்து வருகிறார். அவரிடம்  எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் நேற்று வாக்குமூலம் பெற்றார். அதன்பின் ராம்குமாரை 18ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
 
அவரின் உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதால் ஓரிரு நாட்களில் அவர் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.