வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (16:01 IST)

மாணவிகள் தற்கொலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொடர்பு: ராமதாஸ்

மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பான வழக்கில் கல்லூரி நிர்வாகத்திற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
 

 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பான வழக்கில் அதிர்ச்சியளிக்கும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று அவர்களின் உடற்கூறு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது தான் அதிர்ச்சிக்கு காரணம் ஆகும்.
 
இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயிலும் 3 மாணவிகளின் உடல்களும், அவர்களின் கைகள் ஒன்றாக கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட போதே, அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்ற ஐயம் எழுந்தது.
 
காவல்துறையினர் தாக்கல் செய்த உடற்கூறு ஆய்வறிக்கையில், மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 மாணவிகளின் நுரையீரலில் தண்ணீர் இல்லாததால் அவர்கள் கிணற்றில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரி விக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாணவிகள் மூவரும் படுகொலை செய்யப்பட்டி ருக்கலாம் என்ற அச்சம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 
அடுத்து, மாணவிகளை படுகொலை செய்தது யார்? என்ற வினாவுக்கு விடை கண்டுபிடிக்கப்பட வேண்டும். 3 மாணவிகளின் உடற்கூறு ஆய்வறிக்கை வருவதற்கு முன்பே, ‘‘அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை; அவர்களை யாரோ படுகொலை செய்திருக்கிறார்கள்’’ என கல்லூரியின் நிர்வாகி வாசுகி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். அவரது இந்த வாக்குமூலம் சரியானது தானா? அல்லது விசாரணையை திசை திருப்பு வதற்காக சொல்லப் பட்ட ஒன்றா? என்பதை கண்டறிவதன் மூலம் தான் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை அடையாளம் காண முடியும்.
 
கொல்லப்பட்ட மாணவிகள் மூவரும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்தில் தீவிரம் காட்டியுள்ளனர். இதனால் அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான கோபத்தில் இருந்திருக்கிறது. மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகி யோர் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மற்ற மாணவ, மாணவியரை திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தி வந்ததால் ஆத்திரமடைந்த கல்லூரி நிர்வாகம், அவர்களுக்கு முடிவுரை எழுதியிருக்கலாம் என்ற கோணத்தில் மாணவர்களால் எழுப்பப்படும் சந்தேங்களை அடியோடு புறந்தள்ளிவிட முடியாது.
 
அதுமட்டுமின்றி, கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாக மாணவிகளை மிரட்டி, அச்சுறுத்தி வைத்திருந்த கூலிப்படைத் தலைவன் வெங்கடேசனுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைமை ஆதரவு வழங்கி வந்துள்ளது. கல்லூரி நிர்வாகத்திற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
 
அப்பாவி மாணவிகள் 3 பேரின் படுகொலைக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்? அவர்களுக்கு பின்னணியில் இருந்து ஆதரவு அளித்தது யார்? என்பது குறித்தெல்லாம் விரிவான விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை தமிழக காவல்துறை அடையாளம் காட்ட வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.