செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (19:18 IST)

மே 15 ஆம் தேதி வறட்சி, குடிநீர் பிரச்சனையை தீர்க்க போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

மே 15 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு வறட்சி, குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி பாமக சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனைத்து 32 மாவட்டங்களிலும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக வறட்சி நீடிக்கும் போதிலும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்காக தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வறட்சி நிவாரண நடவடிக்கைகளில் அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
 
தமிழ்நாட்டில் இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் மிகக் கடுமையான வறட்சி நிலவியது. அதை சமாளிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தமிழகத்தின் உணவுக் களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசன மாவட்டங்களில் எலிக்கறியை உண்ணும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
 
அதன் பின்னர் அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்தே தமிழகத்தை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை அல்லது பயிரிட்டாலும் கடும் வறட்சியால் பயிர்கள் கருகும் நிலை தான் காணப்படுகிறது.
 
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளும், பாமக உள்ளிட்ட கட்சிகளும் நடத்திய போராட்டத்தின் பயனாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று 19.03.2013 அன்று தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், இந்த நிவாரணத் திட்டத்தின் நடைமுறைக்கு பொருந்தாத நிபந்தனைகள் காரணமாக 50 சதவிகித விவசாயிகளுக்கு கூட நிவாரண உதவி கிடைக்கவில்லை.
 
தொடர்வறட்சி மற்றும் அதனால் ஏற்பட்ட கடன்சுமை காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் 623 உழவர்கள், 2012 ஆம் ஆண்டில் 499 பேர், 2013 ஆம் ஆண்டில் 105 பேர் என 3 ஆண்டுகளில் மொத்தம் 1227 உழவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டின் தற்கொலைகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 1500-ம் தாண்டும். இவ்வளவு அதிக எண்ணிக்கையில் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள போதிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்காக பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட எந்த உதவியையும் தமிழக அரசு வழங்கவில்லை.
 
வறட்சி தீவிரமடைந்ததன் விளைவாக அனைத்து மாவட்டங்களிலும் இப்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக வேலூர் மாவட்டத்திற்கு ரூ.20 கோடி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரூ.10 கோடி, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.5 கோடி சென்னை தவிர மீதமுள்ள 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வீதம்  தமிழக அரசு  நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது போதுமானதல்ல. குறிப்பாக தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், மதுரை, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில் தமிழக அரசு ஒதுக்கிய ரூ.50 லட்சத்தை வைத்துக் கொண்டு எந்த நிவாரணமும் வழங்க முடியாது.
 
எனவே, தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.25 கோடி முதல் ரூ.60 கோடி வரை நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் பாமக சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடத்தப்படும். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன்.
 
பாமகவின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசு தருமபுரியிலும், பாமக தலைவர் ஜி.கே. மணி வேலூரிலும், பாமக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ.குரு அரியலூரிலும் போராட்டத்திற்கு தலைமையேற்பார்கள். மற்ற மாவட்ட, வட்டத் தலை நகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.