1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (12:31 IST)

ஜெயலலிதாவுக்கு எதிரான கருத்தை ரஜினிகாந்த் மீண்டும் சொல்ல வேண்டும் - ராமதாஸ் அழைப்பு

ஜெயலலிதாவுக்கு எதிரான கருத்தை நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சொல்ல முன் வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
 
சென்னையில் நடந்த பாமக மாநில தலைமை பொதுக்குழு கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ராமதாஸ், தமிழகத்தில் 14 சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. சற்று அரசியலை பின்நோக்கி பார்த்தால் 1952 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. 1967ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வீசிய அலையை, 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக சரியாக பயன்படுத்திக் கொண்டது.
 
தற்போது அதே நிலை தான் அதிமுக அரசுக்கு எதிராக உள்ளது. இதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்த், ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று சொன்னார். தற்போது அந்த கருத்தை நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சொல்ல முன் வர வேண்டும்.
 
திமுக, அதிமுக ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக 2016 ஆம் ஆண்டு பாமக தலைமையில் மாற்று அணி அமைய வேண்டும். இந்த நேரத்தில், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் கட்சியை தொடங்கிய எஸ்.கண்ணப்பன், பாரிவேந்தருடைய இந்திய ஜனநாயக கட்சி, ஈ.ஆர்.ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி சீமான், பழ.நெடுமாறனுடைய தமிழர் தேசிய இயக்கம், காந்திய மக்கள் இயக்கம் தமிழருவி மணியன் ஆகிய 8 கட்சிகள் பாமக தலைமையை ஏற்று மாற்று அணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். சிறிய கட்சிகளாக இருந்தாலும் அவர்கள் வந்தால் மிக பலம் பொருந்திய மெகா கூட்டணியாக நிற்க முடியும்" என்றார்.