வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 22 டிசம்பர் 2016 (16:26 IST)

ராம மோகன் ராவ் மகனுக்கு ரூ. 100 கோடி மதிப்பில் பங்களாவா?!

வருமான வரித்துறையினர் கடந்த 8ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அண்ணாநகரில் உள்ள அவரது அலுவலகங்களில் அதிரடி சோதனை செய்தனர்.


 

இதில் பலகோடி ரூபாய் பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சேகர் ரெட்டி, தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகன் ராவ் உடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது.

இதன் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நேற்று புதன்கிழமை [21-12-15] காலை 5 மணி முதல் இன்று காலை 7 மணி வரை சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 25 மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்ட சோதனையில், ஏராளாமான தங்கம், பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது.

கிடைத்த ஆவணங்களை வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகிய துறையினர் தலைமை செயலகத்துக்கு எடுத்துச் சென்று பிரித்து சோதனை செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ராம மோகன் ராவின் மகன் விவேக் தனது மனைவி வர்ஷினியுடன் வசித்துவரும் திருவான்மியூர் வீட்டின் மதிப்பு மட்டும் ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இரண்டு மாடிகளுடன், நீச்சல் குளம் உள்பட பல்வேறு ஆடம்பர வசதிகளைக்கொண்ட இந்த வீட்டின் வாசலில் கேமரா, ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு உள்ளது.

வீட்டுக்கு யார் வருகிறார்கள் என்பதை கேமராவில் பார்க்கவும், ஒலிபெருக்கியில் அவர்களின் குரல் உள்ளே கேட்பதற்கும் ஏற்ற வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கேயும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.