வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 22 டிசம்பர் 2016 (16:23 IST)

ஜெ. இறந்த போது சேகர் ரெட்டியிடம் ஆலோசனை செய்த ராம மோகன் ராவ் -திடுக்கிடும் தகவல்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த அன்று,  சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம், முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசிய விவகாரம் வெளியே கசிந்துள்ளது.


 

 
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 
 
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரிடமிருந்து 5 கோடி மதிப்புள்ள தங்கம், பல கோடி ரூபாய் பணம் சிக்கியது. முக்கியமாக அதில், ரூ.30 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் சிபிஐ போலீசார் நடத்திய விசாரணையை தொடர்ந்து, ராம் மோகன் ராவ் வீட்டில் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. தற்போது அவர் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்த அன்று அவர் பல மணி நேரம் தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் தொலைபேசியில் பேசியுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த உரையாடலை ஆய்வு செய்த போது, தன்னிடம் உள்ள பல கோடி ரூபாய் பணத்தை எப்படி பதுக்குவது என ராம் மோகன் ராவும், சேகர் ரெட்டியும் ஆலோசனை செய்துள்ளனர்.
 
முதல்வர் மரணம் அடைந்த சூழ்நிலையில் பணத்தை பதுக்குவது எப்படி என தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதன் அடிப்படையில்தான், சேகர் ரெட்டி மற்றும் ராம் மோகன் ராவ் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.