வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (13:35 IST)

தமிழக அரசை குறை கூறிய ராவ் - ஓ.பி.எஸ் பதவிக்கு ஆபத்தா?

''என் மீது குறி வைத்துள்ளனர்; என் உயிருக்கு ஆபத்து உள்ளது,'' என வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் கூறியுள்ளார்.


 

 
சென்னை, அண்ணாநகரில் உள்ள தன் வீட்டில், ராம மோகன் ராவ் இன்று(டிச.,27) காலை, 10:50 மணிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
எனக்கு ஆதரவு தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்., துணை தலைவர் ராகுல், அ.தி.மு.க. எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் தீரன் ஆகியோருக்கு நன்றி. என் வீட்டில், துணை ராணுவமான சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துணையுடன் சோதனை நடந்துள்ளது.
 
அவர்கள் என்ன கண்டுபிடித்தனர் என்பது குறித்த, 'பஞ்சநாமா' எனப்படும் அவர்கள் அளித்த, இரண்டு அறிக்கைகள் உள்ளன. ஒன்று, என் வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள், தலைமை செயலகத்தில் என் அறையில் எடுக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பது குறித்த அறிக்கைககள் அவை. இன்னமும் நான் தமிழக தலைமை செயலாளர் தான். எனக்கு இன்னும் பணியிட மாற்றல் உத்தரவை தமிழக அரசு அளிக்கவில்லை.
 
தலைமை செயலாளர் அறையில் சோதனை நடந்தது என்பது அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல். இதை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. என் வீட்டில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் என்னை வீட்டு சிறையில் வைத்தனர். அப்போது என் வீட்டில் என் மனைவி, என் மகள், என் மகளின் மகள் ஆகியோர் மட்டுமே இருந்தனர்.
 
என் வீட்டில் இருந்து, ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 320 ரூபாய்; என் மனைவி மற்றும் மகளுக்கு சொந்தமான, 40 முதல் 50 சவரன் நகைகள்; 25 கிலோ வெள்ளி சுவாமி சிலைகள் ஆகியவற்றை மட்டுமே, வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். எந்த விதமான ரகசிய ஆவணங்கள் எதையும் அவர்கள் கைப்பற்றவில்லை. என் வீட்டுக்கு வருமான வரித்துறையினர், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், டிச.,21 அதிகாலை, 5:30 மணிக்கு வந்தனர். வந்த உடன் வீட்டை பூட்டி விட்டனர்.
 
என்னை வீட்டு சிறையில் வைத்தனர். அவர்கள் ஒரு 'சர்ச்' வாரன்ட்' காட்டினர். அதில் என் பெயர் இல்லை. என் பெயரில் சர்ச் வாரன்ட் இல்லாமல், என் வீட்டை சோதனையிட்டுள்ளனர். என் மகன் விவேக் பெயர் சர்ச் வாரன்ட் இருந்தது.
 
என் மகன், அமெரிக்காவில், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பில், எம்.எஸ்., பட்டம் பெற்றவர். படித்து முடித்து விட்டு நாடு திரும்பிய பிறகு ஒரு வாரம் கூட அவர் என் வீட்டில் தங்கவில்லை. தனியாக தான் இருந்தார். தலைமை செயலகத்தில் என் அறையில் இருந்து எம்.ஆர்.சி., கிளப்பின் பில்கள் மட்டுமே அவர்களால் கைப்பற்ற முடிந்தது.
 
அதுதவிர சில உதிரி காகிதங்களை அவர்கள் எடுத்து சென்றனர். அவை, மக்கள் என்னிடம் அளித்த மனுக்கள். தலைமை செயலாளர் அறை என்பது, முதல்வரின் ரகசிய ஆவணங்கள் உள்ள அறை. அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீதான கிரிமினல் வழக்குகளுக்கான ஆவணங்கள் உள்ள அறை.
 
அந்த அறையில் சோதனை நடத்த, முதல்வர், உள்துறை செயலாளரிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், இது நடந்து இருக்குமா? நான், புரட்சி தலைவியால் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டவன். 1994ம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டராக இருந்த நாள் முதல், அவரால் பயிற்சி அளிக்கப்பட்டவன். நான், 32 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவன்.


 

 
எனக்கே, இந்த கதி என்றால் அ.தி.முக., தொண்டர்களின் கதி என்ன. மக்களின் கதி என்ன? என் வீட்டிலும், அலுவலக அறையிலும் சோதனை நடத்த வேண்டும் என்றால், முதலில் என்னை அப்பொறுப்பில் இருந்து டிரான்ஸ்பர் செய்து இருக்க வேண்டும். அதன் பின்னரே சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
 
என்னை டிரான்ஸ்பர் செய்ய, இரண்டு நிமிடங்கள் போதும். மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசுக்கு இதற்கான உத்தரவு அளித்து இருந்தால், டிரான்ஸ்பர் செய்து இருப்பார்கள்.என் வீட்டில், என்னையும், என் குடும்பத்தினரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினருக்கு என்னிடம் இருந்து என்ன தேவை என்பது புரியவில்லை. முதல்வர் ஜெயலலிதா, 75 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அவரது உடல் நிலை நிலவரத்தை கவனித்து வந்தேன்.
 
அதன் பின், 'வர்தா' புயல் பாதிப்புக்கான நிவாரண பணிகளில் இருந்தேன். தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. மாநில அரசு மீது எந்த மரியாதையும் அவர்களுக்கு இல்லை. என் மருமகள் நிறைமாத கர்ப்பிணி.
 
அவரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். என் உயிருக்கு ஆபத்தில் உள்ளது. எனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு ராம மோகன் ராவ் கூறினார். 
 
இந்த சோதனைக்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று ராம் மோகன் ராவ் மறைமுகமாக தமிழக முதல்வர் ஓ.பன்னிர் செல்வத்தை என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் என்ன பதில் கூறப்போகிறார்? அவரின் பதவிக்கு எதாவது ஆபத்து வருமா? என பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 
சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்