வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (10:10 IST)

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரிய மனு: நீதிமன்றம் தள்ளுபடி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வழக்குறைஞர் சாந்த குமரேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
சாந்த குமரேசன் தாக்கல் செய்த அந்த மனுவில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இதை வெளியே கொண்டு வந்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி ரகோத்தமன், வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் விடுவிக்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.
 
மற்றொரு சிறப்பு அதிகாரியாக இருந்த கார்த்திகேயன், தண்டனையை நிறைவேற்றக்கூடாது எனவும் கூறியுள்ளார். மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்தும் வகையில் செயல்பட்ட அமெரிக்காவின் சிஐஏ போன்ற அமைப்புகளுக்கு ராஜீவ் கொலையில் பெரும் பங்குண்டு. எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். 
 
இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் ஆகியோர், ‘இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்து தீர்ப்பைப் பெற முடியும். இங்கு விசாரிக்க முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.