வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 10 மார்ச் 2018 (12:38 IST)

ராஜ்யமா இல்லை இமயமா? - ரஜினியின் பயணம் எதை நோக்கி?

நடிகர் ரஜினிகாந்த் இமயமலையை நோக்கி மீண்டும் தனது ஆன்மீக பயணத்தை துவங்கியிருப்பது அவரிடம் அரசியல் அதிரடிகளை எதிர்பார்த்த அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 
நடிகர் ரஜினிகாந்தின் பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். 1996ம் ஆண்டு  அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக ரஜினி கருத்து தெரிவித்த பின், அதே ரசிகர்கள், அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என அதிகம் எதிர்பார்த்து காத்துக்கிடந்தனர். அந்நிலையில்தான், கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் அறிவிப்பை ரஜினி வெளியிட்டார்.  
 
தற்போது அவர் ஷங்கரின் ‘2.0’ மற்றும் ரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார். காலா படம் விரைவில் வெளியாகும் நிலையில் இருக்க, கிராபிக்ஸ் பணி காரணமாக 2.0 படம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கிடையில் கமல்ஹாசன் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, மதுரையில் மாநாட்டையும் நடத்தி முடித்துவிட்டார். 
 
எனவே, அரசியலில் வேகமாக செயல்பட வேண்டிய சூழலில் ரஜினி இருக்கிறார். அந்நிலையில்தான், சமீபத்தில், கடந்த பிப்ரவரி மாதம் நெல்லை மாவட்ட ரசிகர்களை சென்னையில் அவர் சந்தித்தார். அப்போது, கட்டிடத்தை பலப்படுத்திவிட்டு அரசியலை தொடங்குவோம் எனக் கூறியிருந்தார். ரசிகர்களும் உற்சாகத்துடன் வீடு திரும்பினர்.

 
அதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து அதிரடி அரசியல் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினியின் புதிய பட அறிவிப்பு வெளியாகி அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அந்நிலையில்தான், சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை அவர் திறந்து வைத்தார். அவரது நண்பர் ஏ.சி.சண்முகம் வற்புறுத்தியதால்தான் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள ஒத்துக்கொண்டாலும், தான் அரசியலில் இருப்பதை அவரின் ரசிகர்களுக்கு மறைமுகமாக ரஜினி கூறியிருக்கிறார் என அரசியல் விமர்ச்கள் கூறினர்.
 
அந்த விழாவில் எம்.ஜி.ஆரோடு தனக்கு இருந்த நெருக்கம், எம்.ஜி.ஆர் அவருக்கு செய்த உதவிகள் என  பல விஷயங்களை ரஜினி மனம் திறந்து பேசிதோடு, அவர் மீது வைக்கப்பட்ட பல விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் பேசினார். ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசினார். அதோடு, ஜெ.வின் மறைவிற்கு பின் இங்கே ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது உண்மைதான். அதனால்தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என அதிரடியாக பேசினார். அதேபோல், எம்.ஜி.ஆரைப் போல் ஆக முடியாவிட்டாலும், அவரின் ஆட்சியை தன்னால் கொடுக்க முடியும் என உறுதியாக கூறினார்.
 
இந்த விழாவில் அமைந்த அவரின் பேச்சு, அவரது ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்தது. புதுப்பட அறிவிப்பால் அப்செட்டில் இருந்த அவரின் ரசிகர்கள் ‘தலைவர் அரசியலில்தான் இருக்கிறார்’ என சமாதானம் கூறிக்கொண்டனர்.

 
இந்நிலையில்தான், நேற்று விமானம் மூலம் இமயமலைக்கு அவர் கிளம்பி சென்றார். அதாவது ஆன்மீக அரசியல் தருவதாக கூறிய ரஜின் மீண்டும் தன் ஆன்மீக பயணத்தை துவங்கி விட்டார். இது அவரின் ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும், சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. அதே விமான நிலையத்தில் ‘ஆன்மீக சாமி மலையேறிவிட்டது’ என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது.
 
ரஜினிகாந்த கடந்த சில வருடங்களாக 2.0 மற்றும் காலா ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். எனவே, ஓய்வுக்காக அவர் தன் மனதுக்கு பிடித்தமான இமயமலைக்கு செல்கிறார். அதில் தவறில்லை. தமிழ்நாட்டில் முக்கிய பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்த போது ஜெயலலிதா கொடநாட்டிற்கும், ஸ்டாலின் லண்டனுக்கும் சென்ற சம்பவங்கள் இதற்கு முன் நடந்துள்ளன.
 
ஆனால், திருச்சியில் காவல் அதிகாரியால் மரணமடைந்த உஷா மற்றும் சென்னை கல்லூரி வாசலில் கொலை செய்யப்பட்ட அஸ்வினி ஆகிய இருவரின் மரணம் பற்றி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியது போது குறைந்தபட்சம் கருத்து கூட தெரிவிக்காமல் அவர் சென்றது, ரசிக்கும்படி இல்லை. மேலும், அவர் மீதான சந்தேகத்தை அவரின் செயல்பாடு வலுவடையவே செய்துள்ளது.
 
பாபா படத்தில் இடம்பெறும் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ராஜ்யமா இல்லை இமயமா? யார் இவன்? நாளை யார் இவன்?..
 
ரஜினிகாந்தின் பயணம் எதை நோக்கி?....