வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 27 ஜூலை 2016 (15:38 IST)

எங்கள் அன்பை உரசி பார்க்காதீர்கள் : ரஜினிக்கு ரசிகர் எழுதிய கடிதம்

கபாலி படம் வெளியானது போது, முதல் நாள் படம் பார்க்க ரஜினியின் ஏராளமான ரசிகர்கள் முயன்றனர். ஆனால் சிலருக்கு மட்டும்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. ஏராளமான டிக்கெட்டுகளை திரையரங்க அதிபர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்று விட்டதாக புகார் எழுந்தது.


 

 
இதுபற்றி சாது ஸ்ரீராம் என்பவர் தன்னுடைய முகநூலில் ரஜினிக்கு கடிதம்  எழுதுவது போல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஒரு குட்டிக்கதையின் மூலம் அவர் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
ஒரு காடு. அதன் பெயர் சாந்தி வனம். அங்கு ஒரு எறும்புக் கூட்டம் வசித்து வந்தது. அவை எந்த நேரமும் உழைக்கும். காட்டுக்கு ஓர் அணில் வந்தது. அது சற்று வித்தியாசமானது. தலை, உடல், கால்கள் போன்றவை மற்ற அணில்களைப் போல் காணப்பட்டாலும், அதன் வால் தங்க நிறத்தில் காணப்பட்டது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.
 
அணிலைப் பார்த்து ஆச்சர்யப்பட்டன எறும்புகள். அதனுடன் பேசின.
 
‘உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. எங்களுடனே தங்கிவிடுங்கள். தேவையான எல்லா வசதிகளையும் செய்து தருகிறோம்', என்றன.
 
‘சரி. உங்கள் விருப்பபடியே இங்கேயே தங்கிவிடுகிறேன். தங்குவதற்கும் இடமும், சாப்பிட தினமும் இரண்டு உருண்டை உணவும் தரவேண்டும்', என்றது அணில்.
 
கோரிக்கையை ஏற்றுக்கொண்டன எறும்புகள். அன்று முதல் அணிலுக்காகவும் சேர்த்து உழைக்கத் தொடங்கின. தினமும் இரண்டு உருண்டை உணவைக் கொடுத்துவந்தன. தங்களுடன் தங்கவால் அணில் தங்கியிருப்பதைப் பெருமையாக நினைத்தன. இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.
 
ஒரு நாள் எறும்புகளை அழைத்தது அணில். பக்கத்தில் மற்றொரு சாதாரண அணில் நின்றுகொண்டிருந்தது.
 
‘இவர் என் விருந்தாளி. இனி இவருக்கும் சேர்த்து உணவைச் சேகரித்து கொடுங்கள்', என்றது அணில்.
 
எறும்புகள் ஏற்றுக்கொண்டன. சில நாட்களில் மேலும் சில நண்பர்களையும் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டது அணில். எறும்புகளின் உழைப்பு அதிகமானது.
 
ஒரு நாள் அணிலின் நண்பன் ஒரு யோசனை கூறியது.
 
‘இந்த வாழ்க்கையில் என்ன திருப்தி இருக்கிறது? பக்கத்தில் நிறைய காடுகள் இருக்கின்றன. அங்கும் சென்று தங்குவோம். நம்முடைய புகழ் எல்லோருக்கும் தெரியவேண்டும்', என்றான் நண்பன்.
 
யோசனையை ஏற்றது அணில். அதன்படி பக்கத்து காட்டுக்குச் சென்றன. பிறகு அங்கிருந்து மற்றொரு காட்டுக்குச் சென்றன. இப்படியாகப் பல காடுகளில் வாசம் செய்தது. ஒரு காட்டுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தங்குவது என்று முடிவெடுத்தது அணில். கிட்டத்தட்ட எல்லா காடுகளிலும் உள்ள எறும்புகள் அணிலுக்காக உழைத்தன.
 
ஆனால் சாந்தி வனத்தில் இருந்த எறும்புகள் வருத்தத்தில் இருந்தன.
 
‘தங்களுடைய உழைப்பை கொட்டிக்கொடுத்தும் அணில் விசுவாசமாக இல்லையே' என்று வருத்தப்பட்டன.
 
அந்த நேரத்தில் சாது அங்கு வந்தார். தங்களின் வருத்தத்தை சாதுவிடம் வெளிப்படுத்தின. பொறுமையாக கேட்டார் சாது.
 
‘சரி இப்போ அந்த அணில் எங்கே', என்று கேட்டார் சாது.
 
‘அதோ பாருங்கள் உச்சாணி கிளையிலே உட்கார்ந்திருக்கிறது', என்றன எறும்புகள்.
 
கிளையின் மேலே கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தது அணில். தங்க நிறத்தில் அதன் வால் தொங்கிக்கொண்டிருந்தது. சாது அதனுடன் பேசினார்.
 
‘அணிலே எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார் சாது.
 
பதிலேதும் சொல்லாமல் அலட்சியமாக திரும்பிக்கொண்டது அணில்.
 
‘சரி உன் பெயரையாவது சொல்', என்றார் சாது.
 
சாதுவின் பக்கம் மெதுவாக திரும்பியது அணில்.
 
‘கபாலி டா', என்று சொல்லிவிட்டு மீண்டும் திரும்பிக்கொண்டது அணில்.

எறும்புகளிடம் பேசினார் சாது.
 
‘இது நல்ல அணிலாகத்தான் இருந்தது. ஆனால், நண்பர்கள் இதைக் கெடுத்துவிட்டார்கள். அவர்கள் இத்தனை நாட்கள் உங்கள் உழைப்பை திருடியிருக்கிறார்கள். இந்த பிரச்னைக்கு இன்று இரவு தீர்வு கிடைக்கும்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.
 
அன்று இரவு சாது ஒரு கத்தரிக்கோலுடன் வந்தார். அணில் தூங்கிக்கொண்டிருந்தது. வால் தொங்கிக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த வாலை ‘நறுக்' கென்று துண்டித்தார். வலியால் அலறித்துடித்தது அணில். சுற்றிலும் இருட்டு. வாலை யார் துண்டித்தது என்று அணிலுக்குத் தெரியவில்லை.
 
அடுத்த நாள் விடிந்தது. சாது அந்த இடத்துக்கு வந்தார். கீழே கிடந்த தங்க வாலை சுற்றி எறும்புகள் நின்று கொண்டிருந்தன. கிளையின் மீது அணில் மட்டும் இருந்தது. நண்பர்களைக் காணவில்லை.
 
சாதுவிடம் பேசியது அணில். தற்போது அதன் குரலில் நடுக்கம். தலையில் இருந்த கனமெல்லாம் காணமல் போயிருந்தது.
 
‘ஐயா! எனக்கு ஏன் இந்த நிலை. இதற்கு காரணம் யார்?', என்று கேட்டது அணில்.
 
சாது சொன்ன பதில். . . . . . . .
 
‘வெறுப்பு டா.......' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.
 
அப்போது எறும்புகள் பேசின.
 
‘அணிலே! உங்களை முதலில் பார்த்தவுடன் எங்களைக் கவர்ந்தது தங்க வால். அது எங்களைக் கவர்வதற்கு மட்டுமே பயன்பட்டது. நாங்கள் உங்கள் மீது வைத்தது அன்பு. அன்புக்கும் தங்க வாலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. உன் மீது வைத்துள்ள அன்பு எந்த நாளும் குறையாது', என்று சொல்லிவிட்டு அணிலுக்காக உழைக்க புறப்பட்டன.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே! அன்பு விலை மதிக்கமுடியாதது. அதற்கு விலை நிர்ணயம் செய்யாதீர்கள். மக்களுக்காக நடியுங்கள். தயாரிப்பாளர்களுக்காக நடிக்காதீர்கள். உங்களின் தங்க வால் என்றும் உங்களுடனே இருக்கட்டும். இல்லாவிட்டாலும் எங்களின் அன்பு குறையாது. அதை உரசிப்பார்க்காதீர்கள். இது சுட்டிக்காட்டும் நேரம்.
 
(அணில், எறும்பு என்ற இரண்டு உயிரினங்களைச் சொல்லி ‘கதை எழுது பார்ப்போம்', என்று எனது உயிர் தோழர் அன்பாகக் கேட்டுக்கொண்டார். விளைவு ‘கபாலி'.)
 
அன்புடன் ........
சாது ஸ்ரீராம்
 
என்று அவர் எழுதியுள்ளார்.