வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 9 டிசம்பர் 2015 (09:04 IST)

வண்டலூர் பூங்காவில் இருந்து விலங்குகள் தப்பிச் சென்றதாக சொல்லப்படுவது வதந்தி: வனத்துறை அமைச்சர்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து எந்த விலங்கும் தப்பிச் செல்லவில்லை என்றும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் வனத்துறை அமைச்சர் ஆனந்தன் கூறியுள்ளார்.


 

 
கனமழை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்பகுதியில் நீர் தேங்கியதால் விலங்குகள் கூண்டுக்குள் முடங்கின.
 
இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருநது விலங்குகள் தப்பி வெளியேறி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
 
வண்டலூரில் இதுவரை 17 இடங்களில் சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு சுவர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சுற்றுச்சுவர்கள் மீண்டும் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
 
இதற்கிடையில், தேங்கி இருக்கும் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. விலங்குகளுக்கு தொற்று நோய் பரவாமலிருப்பதற்கு அவற்றின் இருப்பிடங்களில் பராமரிப்புப் மற்றும் விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் பூங்காவில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
இதைத் தொடர்ந்து ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளும் பாதுகாப்பாக உள்ளன. அங்கு இருந்து எந்த விலங்கும் தப்பி செல்லவில்லை.
 
இது தொடர்பாக சமூக வளைத்தளங்களில் வரும் தகவல்கள் ஆதாரமற்றது. அவ்வாறு பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
 
மழையினால் கடந்த 2 ஆம் தேதி மட்டும் பூங்காவுக்கு விடுமுறை விடப்பட்டது. மற்ற நாட்களில் பூங்கா தொடர்ந்து இயங்கி வருகிறது. இவ்வாறு ஆனந்தன் கூறினார்.