1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 26 பிப்ரவரி 2015 (15:45 IST)

சென்னை சென்ட்ரலில் ரயில்வே தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மத்திய அரசையும் ரயில்வேதுறையின் தொழிலர் விரோதப் போக்கைக்கையும் கண்டித்து, ரயில்வே தொழிலாளர்கள் சென்ட்ரலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில் ரயில்வே துறையில் 'அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயம், புதிய பென்சன் திட்டம் போன்ற தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.
 
சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் வளாகத்தில் இன்று 16 தொழிற்சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. இந்த உன்னாவிரதப் போராட்டத்தில் சுமார் 1000 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
 
தொழிலாளர்களின் இந்த போராட்டத்துக்கு ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எஸ்.ஆர்.இ.எஸ். பொதுச் செயலாளர் பி.எஸ்.சூரிய பிரகாசம், ஜானகிராமன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஞானசேகரன், ராமதாஸ், காளிமுத்தன், ஆர்.மோகன், பி.சேகர், பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
 
அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்தத் போராட்டத்தின் போது, மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பேசினார்கள்.
 
மேலும், அடுத்தக் கட்டமாக ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லியை நோக்கி பேரணி மற்றும் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
 
தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாவிட்டால் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக நாடு தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று போராட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல திட்டங்களில் தனியார் முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.