வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 22 ஜனவரி 2017 (16:10 IST)

மாணவர்கள் போராட்டத்தை உடலுறவுடன் ஒப்பிட்டு பேசியவர் வீடு முற்றுகை!

தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் போராட்டம், அறப்போராட்டத்தை உடலுறவுடன் ஒப்பிட்டு பேசிய பீட்டா அமைப்பின் ஆர்வலர் ராதாராஜன் வீடு முற்றுகை இடப்பட்டுள்ளது.


 

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்ட உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

மெரினாவில் இன்று ஆறாவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

மாணவர்களின் தன்னெழுச்சியான இந்த அறப்போரட்டத்தை விலங்குகள் நல ஆர்வலரான ராதாராஜன் பிபிசி தமிழ் வானொலிக்கு அளித்த பேட்டியில், ”தற்போது தனி தமிழ்நாடு வேண்டும் என்று கேட்டால் 25000 பேர் வருவார்கள். ஆனால் இலவசமாக உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என ஒரு தலைப்பு வைத்தால் அதற்கு 50000 பேர் கண்டிப்பாக வருவார்கள்” என பேசியிருந்தார்.

இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு தமிழகமெங்கும், எதிர்ப்பலை நிலவி வருகிறது. ஆனால் ராதா ராஜன், தொடர்ந்து தமிழக மக்களுக்கு எதிராகவே பேசி வருகிறார். இதனால், ராதா ராஜனை கண்டித்தும் கோஷம் எழுப்புகின்றனர்.

இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள ‘பீட்டா’ அமைப்பின் நிர்வாகி ராதா ராஜன் வீட்டை, தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி தலைமையில் இன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.