1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2017 (12:29 IST)

தினகரன் - எடப்பாடி ; வலுக்கும் மோதல் - நீடிக்குமா ஆட்சி?

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் வலுப்பெற்று வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சசிகலா குடும்ப உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என ஓ.பி.எஸ் அணி முரண்டுபிடிக்க, அவ்வாறே செய்வதாக எடப்பாடி அணி அறிவித்தது. இது தினகரனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயினும், இரு அணிகளும் ஒன்றிணைய தடையாக இருக்க நான் விரும்பவில்லை. எனவே, கட்சி பணியிலிருந்து நான் விலகிகொள்கிறேன் என தினகரன் கூறினார். அதன் பின் அவர் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அவரை கைது செய்து டெல்லி புழல் சிறையில் அடைத்தனர் டெல்லி போலீசார். 
 
அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வந்த தினகரன், மீண்டும் கட்சிப்பணியில் ஈடுபடுவதாக அறிவித்தார். இது எடப்பாடி தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், தனக்கு எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புழல் சிறையில் தன்னை வந்து சந்திக்கவில்லை. தற்போது ஜாமீன் பெற்று வந்தும் கூட தன்னை நேரில் சந்திக்க வரவில்லை. தொலைபேசியில் கூட அழைத்து பேசவில்லை என எடப்பாடி மீது தினகரன் கோபமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தினரன் பக்கம் தற்போது 35 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். எனவே, ஓ.பி.எஸ் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், தினகரனுக்கு கட்சியில் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்கிற தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கோரிக்கையை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை. மேலும், அனைத்து முடிவுகளையும் அவரே எடுக்கிறார். அவரைப் பொறுத்தவரை கட்சியும் நானே.. ஆட்சியும் நானே என செயல்படுகிறார். இது தினகரன் தரப்பிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதன் காரணமாக, தினகரன் மற்றும் எடப்பாடி ஆதரவாளர்களுக்கிடையே மறைமுகமாக இருந்த வந்த சண்டை, தற்போது தெருவுக்கே வந்துவிட்டது. இருவரின் ஆதரவாளர்களும் நேரிடையாக காட்டமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இதில், எடப்பாடி அணியை சேர்ந்த எம்.பி ஹரி சமீபத்தில் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளியான சசிகலா எப்படி கட்சியை நடத்த முடியும்? என பகீரங்கமாக கேள்வி எழுப்பியதோடு, கட்சியை விட்டு தினகரன் விலகி நிற்க வேண்டும் என தெரிவித்த கருத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இதற்கு பதிலடி கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் “ சசிகலா 2 நாட்கள் கூவத்தூரில் இல்லை என்றால் இந்த ஆட்சியே இல்லை. கட்சியும் ஆட்சியும் நடுத் தெருவிற்கு வந்திருக்கும். இவர்கள் எல்லோரும் சேர்ந்துதானே சசிகலாவை பொதுச்செயலாளராகவும், தினகரனை துணைப்பொதுச்செயலாளராகவும் ஆக்கினார்கள். இப்போது திடீரென என்ன ஞானோதயம் ஏற்பட்டது?. இவர்களை முதல்வர் பழனிச்சாமி கண்டிக்காமல், நரசிம்மராவ் போல் அமைதி காக்கிறார். அவர் வாயை திறந்து பேச வேண்டும்” என கூறியுள்ளார்.
 
அதேபோல், தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்கிறார் என்பதை எடப்பாடி வாய் திறந்து கூற வேண்டும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.


 

 
இப்படியே போனால், ஜனாதிபதி தேர்தலுக்கு பின், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், எடப்பாடி அரசுக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் வாங்குவர்கள். அவர்களின் ஆதரவு இல்லாமல், எடப்பாடி பழனிச்சாமியாலும் ஆட்சி அமைக்க முடியாது. இது நிச்சயம் திமுகவிற்கு சாதகமாக முடியும்.
 
இப்படி தினகரன் - எடப்பாடி அணியினருக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலை அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.