வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 27 ஆகஸ்ட் 2014 (17:16 IST)

புதுவையில் சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல் மீது கடும் நடவடிக்கை: கவர்னர் உத்தரவு

புதுவையில் சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதுவை மாநில கவர்னர் ஏ.கே.சிங் உத்தரவிட்டுள்ளார்.
 
புதுவையில் விபச்சார கும்பல் ஒன்று பள்ளி சிறுமிகளை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதில் 13 வயது நிரம்பிய ஒரு மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றார். இந்த விவகாரம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
விபச்சார கும்பலிடம் சிக்கியிருந்த மாணவிகளிடம் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் என பலரும் வாடிக்கையாளர்களாக சென்றிருந்தது தெரிய வந்தது.
 
18 வயது நிரம்பிய ஒரு பெண் விபச்சார தொழிலில் ஈடுபட்டால் அவரிடம் வாடிக்கையாளராக செல்பவர்கள் மீது விபச்சார தடுப்பு சட்டத்தின்படி தான் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளிடம் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அது கற்பழிப்பு குற்றமாகும்.
 
எனவே இந்த சிறுமிகளிடம் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
 
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான ஜாமீன் மனு விசாரணையின் போது நீதிபதி சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளியவர்கள் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இது சம்பந்தமாக சி.ஐ.டி. காவல்துறையினர் நீண்ட காலமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை.
 
சிறுமிகளிடம் விபச்சாரத்துக்கு சென்றவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்திருப்பதாக அப்போது ஐ.ஜி.யாக இருந்த காமராஜ் கூறியிருந்தார். 3 போலீஸ் அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் இந்த விவகாரம் வெளிவந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
 
எனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பெண்கள் அமைப்புகள், மணவர் அமைப்புகள் இதை கையில் எடுத்து போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று கம்யூனிஸ்ட் கட்சி துணை அமைப்புகள் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.
 
இதையடுத்து கவர்னர் ஏ.கே.சிங், போலீஸ் ஐ.ஜி. பிரவீன் ரஞ்சனை அழைத்து பேசினார். அப்போது ஐ.ஜி.யிடம் கவர்னர் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் 10 நாட்களுக்குள் உறுதியான நடவடிக்கை எடுத்து எனக்கு தகவல் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
 
எனவே இந்த வழக்கில் விசாரணை பிடி இறுகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான விசாரணை நடத்தினால் போலீஸ் அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் இதில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டால் சிறுமி பெற்ற குழந்தைக்கு தந்தை யார் என்பதையும் மரபணு பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம்.
 
கேரளா மாநிலம் சூரியநெல்லியில் இதேபோல் ஒரு கும்பல் சிறுமி ஒருவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் விருந்தாக்கியது. இந்த விஷயம் பூதாகரமாக மாறி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் தலைகள் உருண்டன. புதுவையில் நடந்த இந்த சம்பவமும் கிட்டத்தட்ட சூரிய நெல்லி விவகாரம் போலவே சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.