ஸ்டெர்லைட் விவகாரம்: போராட்டம் கூடாது; என்ன சொல்ல வர்றார் கமல்ஹாசன்?

kamal
Last Updated: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (14:59 IST)
ஸ்டெர்லைட் விவகாரத்தில் போராட்டத்தை தவிர்த்து சட்டப்படி அணுகவேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். 
 
இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 3 வார காலத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
sterlite
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், ஸ்டெர்லைட் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே கூடாது அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மக்கள் போராட்டத்தை கையிலெடுக்காமல், இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக சந்திக்க வேண்டும். 
 
ஏற்கனவே போராட்டத்தினால் பல உயிர்களை இழந்தோம். ஆகவே சட்டப்பூர்வமான நடவடிக்கை தான் இதற்கு ஒரே தீர்வாக இருக்கும் என கமல்ஹாசன் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :