வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (08:13 IST)

அதிமுக அரசின் போக்கு, தமிழகத்தில் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும்: விஜயகாந்த் எச்சரிக்கை

அகிம்சை முறையில் நடத்தும் போராட்டத்தைக் கூட வன்முறைக்களமாக மாற்றும் அதிமுக அரசின் போக்கு, தமிழகத்தில் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை எச்சரிக்கின்றேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
இது குறித்மு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
 
ஆனால் அதிமுக அரசு அதற்கு செவிசாய்க்க மறுத்ததன் விளைவு, காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழப்பாகும்.
 
தாய்மார்களின் கண்ணீரை துடைக்கவும், இளைஞர்களைக் காக்கவும், மதுவின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கவும், பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகத்தில் நாளை நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும் நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றகோரிய பொதுமக்களின் போராட்டத்தில், காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, தடியடி நடத்தியதோடு மட்டுமல்லாமல், கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கலவர பூமியாக மாற்றியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கக்கூடிய செயலாகும். அரசியல் கட்சிகள் அகிம்சை முறையில் நடத்தும் போராட்டத்தைக் கூட வன்முறைக்களமாக மாற்றும் அதிமுக அரசின் போக்கு, தமிழகத்தில் பல்வேறு பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை எச்சரிக்கின்றேன்.
 
உடனடியாக தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.